கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு – துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணம் குறித்து காவல் ஆணையர் விளக்கம்!

0152.jpg

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி மீது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று குற்றவாளிகளை துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்ததாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற இரவு குற்றவாளிகளை பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவற்றின் முயற்சியால் குற்றவாளிகள் துடியலூர் அருகே வெள்ளலூரில் பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது. கைது செய்ய முயன்றபோது அவர்கள் போலீசாரை தாக்கி தப்ப முயன்றதால் தற்காப்புக்காக போலீசார் குறைந்தபட்ச அளவில் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுட்டனர்.

இதில் சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகிய மூவரும் கால்களில் காயமடைந்தனர். மூவரும் பின்னர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 10 ஆண்டுகளாக கோவையில் கட்டிடப்பணி மற்றும் மரம் வெட்டுதல் வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு முன்பே கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன எனவும் கூறப்பட்டது.

சம்பவம் நடந்த இரவு மூவரும் மது அருந்தி மீண்டும் மது வாங்கி வந்தபோது கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியின் நண்பரை அரிவாளால் தாக்கியும் காரின் கண்ணாடியையும் உடைத்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.

இவர்களுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் முன்பாக எந்த தொடர்பும் இல்லை என்றும், திட்டமிட்டு நடந்தது அல்ல என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி தற்போது சிகிச்சையில் நலமாக உள்ளார்; உளவியல் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. சம்பவ இடம் குறித்தும், நிலம் யாருடையது என்பது குறித்தும் வருவாய்த்துறையுடன் ஆலோசனை நடக்கிறது.

அதேபோல், பாஜகவினர் அனுமதியின்றி தீப்பந்த போராட்டம் நடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Summary :
In Coimbatore gang-rape case, 3 accused shot in leg and arrested after attacking police. Commissioner clarifies the encounter details.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *