சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வைப்புத் தொகை கட்டாயம் செலுத்தும் விதிகள் வகுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“அரசியலை வணிகமயமாக்கும் முன்மொழிவு இது” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் 5,000 பேருக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வைப்புத்தொகை கட்டாயம் செலுத்த வேண்டும் என கூறப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அரசியலை வணிகமயமாக்கும் முயற்சியாகும். இதுபோன்ற யோசனையை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.”
அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல பொதுக்கூட்டங்கள் தான் முக்கியமான வழி என அவர் கூறினார். சிறிய கட்சிகள் நன்கொடை வசூலித்து கூட்டங்களை நடத்துகின்றன; அவர்களிடம் வைப்புத்தொகை கோருவது ஜனநாயகத்தையே ஆபத்துக்கு உள்ளாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
“அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட உரிமை. பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. அதற்காக பணம் கேட்பது பொருந்தாது,” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், பொதுக்கூட்டங்களின் போது பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் இருந்து தண்டம் வசூலிக்கும் சட்டம் ஏற்கனவே உள்ளது என்றும், அதற்காக வைப்புத்தொகை விதிக்க தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
“அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வைப்புத்தொகை கட்டாயப்படுத்தும் முன்மொழிவை திமுக அரசு வாபஸ் பெற வேண்டும். அதற்கு பதிலாக ஒழுங்கும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தும் விதிகளை உருவாக்க வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.
Summary :
PMK leader Anbumani Ramadoss opposes Tamil Nadu govt’s plan for ₹1–20 lakh deposits for rallies, calling it a threat to democracy.








