புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேனில் கரப்பான் பூச்சி மிதந்த காட்சி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து டீலர்கள் மூலம் புதுச்சேரி முழுவதும் தண்ணீர் கேன்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், லெனின் வீதியில் உள்ள விஷ்ணு டிரிங்கிங் வாட்டர் சப்ளை நிறுவனம் இன்று கார்த்திக் காந்தி என்பவரின் அலுவலகத்திற்கு தண்ணீர் கேன்கள் வழங்கியது.
அதில் ஒன்றில் கரப்பான் பூச்சி மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திக், விநியோகித்த டீலரிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கார்த்திக், சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் கரப்பான் பூச்சி மிதந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Summary :
A cockroach was found in a purified water can supplied in Puducherry. The viral video has sparked outrage and raised hygiene concerns among residents.








