அதிமுக மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அதில், “எனக்கு இரண்டு முறை வாய்ப்பு கிடைத்தும், கட்சி உடைந்து விடக்கூடாது என்பதற்காக நான் விட்டுக் கொடுத்தேன். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனது எப்படி என்பது அனைவருக்கும் தெரியும். நான் அதிமுகவில் அவர் வருவதற்கு முன்பே சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன்.
எனக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டிருக்கலாம். கட்சியில் இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய எனக்கு இதுபோன்ற நீக்கம் வேதனை அளிக்கிறது. துரோகத்துக்கான நோபல் பரிசு இருந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கே வழங்கப்பட வேண்டும்.
அதிமுகவை ஒருங்கிணைக்கவே டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸை சந்தித்தேன். இதற்காகவே என்னை நீக்கியுள்ளனர். சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்த நடவடிக்கையை தீர்மானிப்பேன்,” என கூறினார்.
இதேவேளை, செங்கோட்டையனின் குற்றச்சாட்டிற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: “கடந்த ஆறு மாதங்களாக செங்கோட்டையன் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டார். அத்திக்கடவு–அவினாசி திட்டத்திற்காக நடந்த பாராட்டு விழாவில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை எனக்கூறி பங்கேற்கவில்லை.

பின்னர் அவர் கலந்துகொண்ட நிகழ்வில் கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் இருந்தன. அதிலிருந்தே அவர் திமுகவின் பி டீமாக செயல்படத் தொடங்கினார்.
செங்கோட்டையன் சட்டமன்றத்தில் திமுகவுக்கு எதிராக பேசவில்லை. மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் இணைந்து செயல்பட்டார். அதனால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நான் முதல்வராக வந்த பிறகு தான் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கினேன்,” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Summary :
EPS says Sengottaiyan acted against AIADMK, linked with ousted leaders. Sengottaiyan calls expulsion unfair and vows next legal move.








