அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சுமார் 7 மணியளவில், தஞ்சாவூரிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி, வாரணவாசி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் வளைவைத் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதில் இருந்த சிலிண்டர்கள் ஒன்றோடொன்று மோதியதால் பலத்த வெடிப்பு ஏற்பட்டது. வெடிப்பு சத்தம் பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கப்பட்டு, குண்டு வெடித்ததா என மக்கள் பதற்றமடைந்தனர்.
தீ வேகமாக பரவியதால் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. லாரி ஓட்டுநர் கனகராஜ் (இனாம்குளத்தூர், திருச்சி மாவட்டம்) தீவிர காயமடைந்தபோதும் உயிர் தப்பினார். அவரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து லாரியில் இருந்த சிலிண்டர்களும் ஒவ்வொன்றாக வெடித்து தீப்பிழம்பு எழுந்ததால் அப்பகுதி முழுவதும் அச்சம் நிலவுகிறது. அருகில் வீடுகள் இல்லாததால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அரியலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணமாக தஞ்சாவூர்–சென்னை நெடுஞ்சாலையில் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், லாரி வளைவில் திரும்பும்போது அதிக வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary :
A truck carrying gas cylinders exploded near Ariyalur after overturning. Massive blasts rocked the area; driver survived with serious injuries.








