பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இரு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி, சென்னை பெரம்பூரில் தனது வீட்டிற்கு அருகே ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்துக்குப் பிறகு செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி, ஏ1 குற்றவாளி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். இதில் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாட்டில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்ற மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.
இதையடுத்து, சிறையில் இருந்த சதீஷ் மற்றும் சிவா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், இருவருக்கும் ஜாமீன் வழங்கி, “சி.பி.ஐ. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் விடுவிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், சதீஷ் மற்றும் சிவாவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என நீதிமன்ற வளாகத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary:
In the Armstrong murder case, wife Porkodi Armstrong has filed a petition in the Madras High Court.