புதுச்சேரி:
போலி சைக்கிள் நிறுவன மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமல் இருக்க ரூ.80 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கீர்த்தி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை புதுச்சேரி போலீஸ் டிஐஜி சத்தியசுந்தரம் பிறப்பித்துள்ளார்.
சாரம் காமராஜர் சாலையில் செயல்பட்ட “கோ பிரி சைக்கிள்” என்ற நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து கோடிக்கணக்கான தொகையை வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.45 கோடி மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், அமலாக்கத் துறையின் விசாரணையில், புதுச்சேரியில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் மோசடி நடந்தது உறுதியானது. இதையடுத்து நிறுவனத்தின் 13 வங்கிக் கணக்குகளில் ரூ.20 கோடி முடக்கப்பட்டு, உரிமையாளர் நிஷாத் அகமது கைது செய்யப்பட்டார்.
மொத்தம் 600-க்கும் மேற்பட்டவர்களிடம் முதலீடு பெற்றிருந்த இந்த மோசடி வழக்கு சைபர் கிரைம் பிரிவிலிருந்து சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. விசாரணையின்போது நிஷாத் அகமது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் இருக்க கீர்த்தி ரூ.80 லட்சம் லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டதாக காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன், தனி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவர் பெற்ற பணத்தை மேலதிக அதிகாரிகளுக்கும் பகிர்ந்ததாக கீர்த்தி விசாரணையில் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த வழக்கில் மேலும் சில உயர் அதிகாரிகளும் சிக்குவார்களோ என்ற அச்சம் புதுச்சேரி போலீஸ் துறையில் நிலவுகிறது.
Summary:
A Puducherry cybercrime inspector, Keerthi, has been suspended for accepting ₹80 lakh to avoid arresting suspects in the ‘Go-Pri Bicycle’ scam.