மக்களைப் பதட்டத்தில் வைத்துக் கற்காலத்துக்கு அழைக்கிறதா பா.ஜ.?

414.jpg

மக்கள் நலனுக்காக உழைக்க முடியாவிட்டால் ஓய்வு பெறுங்கள் – இரா.சிவா கடும் எச்சரிக்கை

புதுச்சேரி மக்களின் நலனில் கவனம் செலுத்தாமல், அவர்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்துக் கலவர அரசியல் நடத்தும் போக்கை பா.ஜ.க. கைவிட வேண்டும். இல்லையெனில், மக்கள் தக்க நேரத்தில் பா.ஜ.க.வை நிராகரிப்பார்கள் என்று புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா கடுமையாக எச்சரித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி இந்தியா கூட்டணி எம்பிக்கள் அளித்த மனுவைத் தொடர்ந்து உருவான அரசியல் சூழல் குறித்து இரா.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 120 மக்களவை உறுப்பினர்கள் சபாநாயகரிடம் மனு அளித்ததாகவும், அதில் புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் முதலில் கையெழுத்திட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது நாட்டின் பன்முகத்தன்மையையும், சமத்துவத்தையும் காக்கும் நடவடிக்கை என திமுக தரப்பு விளக்குகிறது. ஆனால், இதனை ‘இந்துக்களுக்கு எதிரான செயல்’ எனப் பா.ஜ.க. திரித்துப் பரப்பி, வைத்திலிங்கம் எம்.பி. உருவ பொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தியது சமூக நல்லிணக்கத்துக்குப் பாதகமானது என்றும் இரா.சிவா சாடியுள்ளார்.

இந்தியா பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் இணைந்து வாழும் தேசம் என்றும், ‘ஒரே மதம், ஒரே மொழி’ என்ற கோட்பாட்டின் மூலம் பன்முகத்தன்மையைச் சிதைக்க பா.ஜ.க. முயல்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார். நீதிபதியை நீக்கக் கோருவது இந்துக்களுக்கு எதிரானது அல்ல; அது அரசியல் சாசன சமத்துவத்தைப் பாதுகாக்கும் செயல் என்பதை உண்மையான இந்துக்கள் அறிவார்கள் என்றும் கூறினார்.

மக்களை எப்போதும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைத்திருந்து, சிந்திக்க விடாமல் செய்து அதிகாரத்தில் நிலைத்திருக்க பா.ஜ.க. முயல்கிறது என்றும், உருவ பொம்மை எரிப்பது போன்ற செயல்கள் வன்முறையைத் தூண்டும் அபாயகரமான போக்காகும் என்றும் அவர் எச்சரித்தார். இது புதுச்சேரியின் சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்றும் தெரிவித்தார்.

‘இந்தியா’ என்ற பெயரே அனைவரையும் அரவணைக்கும் அடையாளம் என்றும், தங்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க பா.ஜ.க. மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும் இரா.சிவா கூறினார்.

இறுதியாக, பா.ஜ.க.வுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த அவர்,
“புதுச்சேரி மக்கள் நலனுக்காக உண்மையாக உழையுங்கள். அதை விட்டுவிட்டு மக்களைப் பதற்றத்தில் வைத்துக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்லும் அரசியலை நிறுத்துங்கள். இல்லையெனில், மக்கள் உங்களை நிராகரிப்பார்கள். மக்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டால், எங்களுக்கு வழிவிட்டு நீங்கள் ஓய்வெடுக்கச் செல்லுங்கள்” என்று கடுமையாகக் கூறினார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் இத்தகைய கலவர அரசியலுக்கு புதுச்சேரி மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும், பா.ஜ.க.வை மக்கள் வெளிப்படையாக நிராகரிப்பார்கள் என்றும் இரா.சிவா தனது அறிக்கையில் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Summary :

DMK leader R Siva criticises BJP for divisive politics in Puducherry, urges focus on public welfare, warns voters will reject BJP in 2026.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *