புதுச்சேரி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சாய் சரவணன் குமார், “உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நக்கல், நையாண்டியுடன் பேசுவதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நமச்சிவாயம், “அமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் சாய் சரவணன் அபத்தமாக பேசுகிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலாக சாய் சரவணன் குமார் இன்று சட்டப்பேரவையில் பதிலளித்தார்.
“சட்டம் ஒழுங்கு குறித்து நல்ல முடிவுகள் எடுப்பார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அது நடக்கவில்லை. கேள்வி கேட்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய உரிமை. ‘ஏன் கேள்வி கேட்டீர்கள்’ என்று கேட்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதை நமச்சிவாயம் புரிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“அமைச்சர் பதவி மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பு. அது யாருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. நான் அந்தப் பதவியில் இல்லை என்பதில் எந்த வருத்தமும் இல்லை. எம்.எல்.ஏவாக இருந்தாலும், மந்திரியாக இருந்தாலும், மக்களுக்காக பணியாற்றுவேன். நமச்சிவாயம் தேர்தலில் தோல்வியடைந்தபின் காமராஜர் போல் ராஜினாமா செய்து கட்சியை வலுப்படுத்தியிருந்தால் அவரின் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டிருப்பேன்.”
அமைச்சராக பொறுப்புடன் நடந்து கொள்ள நமச்சிவாயம் வேண்டும் என சாய் சரவணன் வலியுறுத்தினார்.
“பொறுப்புள்ள அமைச்சராக பேச வேண்டும்; நக்கல், நையாண்டி வேண்டாம். தீவிரவாதத்தையும் வன்முறையையும் ஒழிப்பதே பா.ஜ.க நோக்கம். நமச்சிவாயம் இதுபோன்ற பேச்சை நிறுத்தி மக்களுக்காக செயல்படுவது நல்லது,” என எச்சரித்தார்.
அவர் மேலும், “டி.ஜி.பி மக்கள் பாதுகாப்புக்காக இருப்பவர்; அவருக்கே ஏன் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் ? வெளியூருக்குச் செல்லும் போது மட்டுமே பாதுகாப்பு தேவை; உள்ளூரில் மக்களுக்காக நேரடியாக பணியாற்ற வேண்டும்,” என்றும் கூறினார்.