3 திமுக அமைச்சர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரக்கும் தமிழ்நாடு

214.jpg

சென்னை:
தமிழக அரசின் மூன்று அமைச்சர்களின் வீடுகளுக்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் திமுக அமைச்சர்களான சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், மதத் தலங்கள் என பல இடங்களுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவசரச் சோதனைகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று, தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்று தீவிரச் சோதனைகள் மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

அதேபோல், திருச்சி மாவட்டத்தில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் இல்லங்களுக்கும் இதேபோன்ற மிரட்டல்கள் வந்தன. அங்கும் போலீசார் தீவிர சோதனை செய்தபோது, எந்தவித வெடிகுண்டும் இல்லையென உறுதி செய்யப்பட்டது.

டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ நிலையம் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கையை அதிகரித்துள்ளது. அந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, முக்கிய நகரங்களில் போலீசார் உஷாராக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஒரே நாளில் மூன்று அமைச்சர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பாதுகாப்புத்துறையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தற்போது, அந்த மின்னஞ்சல் அனுப்பிய நபரை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary :
Tamil Nadu tense after email bomb threats to DMK Ministers Sekarbabu, KN Nehru, and Anbil Mahesh. Police verify threats, tighten security.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *