நீண்ட நேரம் கவனம் செலுத்திய பிறகு, கடினமான முடிவுகளை எடுத்த பிறகு அல்லது தொடர்ந்து சிந்தித்த பிறகு “மூளை டயர்ட் ஆகிவிட்டது” என்று உணர்ந்த அனுபவம் அனைவருக்கும் இருக்கும். உடல் உழைப்பு இல்லாவிட்டாலும், மனம் மட்டும் கடும் சோர்வை உணர்வதற்குக் காரணம் என்ன? இந்த அறிவாற்றல் சோர்வுக்கான உயிரியல் விளக்கத்தை, ‘நேச்சர்’ அறிவியல் இதழில் வெளியான பாரிஸ் மூளை நிறுவனத்தின் புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

அறிவாற்றல் சோர்வு என்றால் என்ன?
அறிவாற்றல் சோர்வு (Cognitive Fatigue) என்பது நீண்ட நேர கவனம், சிக்கலான பிரச்சினை தீர்வு அல்லது தொடர்ச்சியான முடிவெடுப்பின் போது ஏற்படும் மனச்சோர்வு நிலை. இது கவனத் திறன், உந்துதல் மற்றும் சரியான முடிவெடுக்கும் திறனை குறைக்கிறது. தூக்கமின்மை அல்லது உடல் உயிரியல் கடிகாரம் சீர்குலைந்தால், இந்த சோர்வு பெரிய தவறுகளுக்குக் காரணமாகலாம். குறிப்பாக நீண்டகால கோவிட் நோயாளிகளில் இது ஒரு பொதுவான அறிகுறியாக காணப்படுகிறது.
மூளை சோர்வடைவதற்கான வளர்சிதை மாற்ற காரணம்
மூளை தொடர்ந்து செயல்பட, ‘அறிவாற்றல் கட்டுப்பாடு’ (Cognitive Control) என்ற திறனை பயன்படுத்துகிறது. புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்வது, தானாக வரும் எதிர்வினைகளை அடக்குவது போன்ற செயல்களுக்கு இந்த கட்டுப்பாடு அவசியம். ஆனால், இந்த உயர்தர நரம்பியல் செயல்பாடு நீண்ட நேரம் தொடரும் போது, மூளையில் வளர்சிதை மாற்றச் சுமை அதிகரிக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் இதை, “உடல் உழைப்பின் போது கழிவுகள் தேங்குவது போல, மன உழைப்பின்போது மூளையிலும் தீங்கு விளைவிக்கும் துணை விளைபொருட்கள் சேர்கின்றன” என்று விளக்குகின்றனர்.
சோர்வு – மூளையின் பாதுகாப்பு அலாரம்
வலி எச்சரிக்கை கொடுப்பதைப் போலவே, சோர்வும் மூளை தனது எல்லையை நெருங்கிவிட்டதை உணர்த்தும் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கை. தொடர்ந்து அதிக அழுத்தம் ஏற்பட்டால், இறுதியில் தூக்கம் வந்து மூளையை பாதுகாக்கும் இயற்கை அமைப்பாக இது செயல்படுகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதிய உயிரியல் அடையாளங்கள்
அறிவாற்றல் சோர்வுடன் தொடர்புடைய உயிரியல் காரணிகளை விஞ்ஞானிகள் தற்போது அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர். குளுக்கோஸ், லாக்டேட், குளுட்டமேட் போன்ற வளர்சிதை மாற்றப் பொருட்களின் மாற்றங்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், அல்சைமர் நோயுடன் தொடர்புடைய amyloid-β போன்ற புரதங்கள், மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி சோர்வை அதிகரிக்கலாம் என்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முடிவெடுக்கும் திறன் ஏன் மாறுகிறது?
சோர்வடைந்த நிலையில், மூளை “செலவு–பலன்” (Cost–Benefit) கணக்கீட்டை மாற்றிக் கொள்கிறது. அதிக முயற்சி தேவைப்படும் செயல்களைத் தவிர்த்து, குறைந்த முயற்சியில் விரைவாக பலன் தரும் தேர்வுகளை அது விரும்பத் தொடங்குகிறது. இதனால் தவறான முடிவுகள் எடுக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
தூக்கமே சிறந்த தீர்வு
அறிவாற்றல் சோர்வு தற்காலிகமானதாக இருந்தாலும், நீண்டகால கோவிட், நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (ME/CFS), மனச்சோர்வு மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நிலைகளில் இது தீவிரமாகிறது. ஆய்வுகள் அனைத்தும் ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்கின்றன—மூளையின் அறிவாற்றல் திறனை மீட்டெடுக்க தூக்கம் தான் மிகச் சிறந்த மற்றும் சக்திவாய்ந்த மருந்து. தூக்கமின்மை ஏற்பட்டால், சில நியூரான்கள் தற்காலிகமாக “உள்ளூர் தூக்க நிலைக்கு” செல்லும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
Summary :
A recent study explains the biological reasons behind cognitive fatigue, showing how prolonged mental effort alters brain metabolism and decision-making.








