2025 அக்டோபர் மாதத்தில் கனடாவின் வேலைவாய்ப்பு சந்தை எதிர்பாராத வளர்ச்சியை கண்டுள்ளது. மொத்தம் 66,600 புதிய வேலைகள் உருவாகி, வேலைஇல்லாதோர் விகிதம் 7.1% இலிருந்து 6.9% ஆக குறைந்துள்ளது.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட வேலை இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். முழுநேர வேலைவாய்ப்பு 18,500 பேர் குறைந்திருந்தாலும், பகுதி நேர வேலைகள் 85,000 பேர் அதிகரித்துள்ளன. இது பெரும்பாலும் தனியார் துறையில் ஏற்பட்ட முன்னேற்றமாகும்.
இளம் தொழிலாளர்கள் (15–24 வயது) மத்தியில் வேலைஇல்லாமை விகிதம் 14.7% இலிருந்து 14.1% ஆக குறைந்துள்ளது — பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இது முதல்முறையாக குறைந்ததாகும். மேலும், 25–54 வயது குழுவில் 38,800 பேர் புதிய வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
சில்லறை மற்றும் மொத்த விற்பனை, போக்குவரத்து, களஞ்சிய துறைகள் ஆகியவை இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளன. குறிப்பாக, சில்லறை மற்றும் மொத்த விற்பனை துறையில் மட்டும் 40,700 புதிய வேலைகள் உருவாகியுள்ளது.
அதோடு, நிலையான ஊழியர்களின் சராசரி மணி ஊதியம் 4% உயர்ந்துள்ளது. இது கனடா வங்கியின் பணவீக்க கணிப்புகளுக்கு முக்கியமான அளவுகோலாக கருதப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி, கனடா டொலரின் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.








