செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்த இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.
செல்போன் உண்டியலில் விழுந்தது
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த அக்டோபரில் திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது, காணிக்கை செலுத்த முயன்றபோது தவறுதலாக தனது ஐபோன் உண்டியலில் விழுந்தது. அப்போது தினேஷ், கோயில் நிர்வாகத்திடம் செல்போனை திரும்ப அளிக்க கேட்டார்.
ஆனால், கோயில் நிர்வாகம் “உண்டியலில் விழுந்ததெல்லாம் முருகனுக்கே” என்று உறுதியாக மறுத்ததுடன், உண்டியலை திறக்க முடியாது என்றும் இந்து சமய அறநிலையத்துறையை அணுகுமாறு தெரிவித்தது.
அறநிலையத்துறையின் பின்னடிப்புகள்
இதையடுத்து தினேஷ், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் எழுத்துப்பூர்வ கோரிக்கை அளித்தார். ஆனால் அதிகாரிகள் கோயில் நிர்வாகத்தின் நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்துக்காட்டினர். தொடர்ந்து பல மாதங்களின் பின்பு, “உண்டியல் திறக்கும் நாளில் செல்போனிலிருந்து டேட்டாவை மாற்றிக் கொள்ளலாம், ஆனால் செல்போன் முருகனுக்கே” என்றே பதில் அளித்தனர்.
அமைச்சர் சேகர்பாபுவின் உறுதி
சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார். “இந்த ஆட்சி மக்களுக்கு கொடுக்கிற ஆட்சி, எடுக்கிற ஆட்சி கிடையாது” என்று அவர் கூறிய பின்பு, செல்போன் திரும்ப வழங்கப்படும் என உறுதியளித்தார்.
அறநிலையத்துறையின் தீர்வு
தினேஷின் செல்போன் இன்று உண்டியலை திறந்தபின் ஏலத்தில் விடப்பட்டது. ஏலத்தில் தினேஷ் ரூ.10,000 கட்டி தனது செல்போனை மீட்டார்.
விமர்சனங்கள்
சம்பவம் தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்:
“மக்களுக்கு கொடுக்கிற ஆட்சி என்றால், செல்போனை உரிமையாளரிடம் பணம் பெறாமல் கொடுக்க வேண்டியதுதானே?”
“தவறுதலாக விழுந்த பொருளை பக்தரிடம் திருப்பி கொடுப்பதே அறம் அல்லவா?”
தினேஷ் தனது செல்போனை மீட்டுவிட்டாலும், முறையான அணுகுமுறை இல்லாமல் செல்போனை வழங்க மறுத்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
உங்கள் கருத்து? அறநிலையத்துறையின் செயல் நியாயமா, அல்லது மாற்றமா வேண்டும்?