சென்னை: சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கவுள்ளது. பூந்தமல்லி-போரூர் இடையிலான சோதனை ஓட்டம் அடுத்த இரு வாரங்களில் நடைபெற இருக்கிறது.
மெட்ரோ திட்டத்தின் முன்னேற்றம்
₹63,246 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் 118.9 கிமீ நீளமுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் 40% பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், பூந்தமல்லி-போரூர் இடையிலான 9 கிமீ பாதை 2025 டிசம்பரில் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 50.5 கிமீ சுரங்கப்பாதையில் 19 கிமீ மட்டுமே இதுவரை முடிக்கப்பட்டுள்ளது. காரிடார் 3-ல் ரத்து செய்யப்பட்ட மெட்ரோ ஸ்டேஷன் டெண்டர் காரணமாக சில வழித்தடங்களில் பணிகள் தாமதம் ஆகியுள்ளன. இருப்பினும், அதிகாரிகள் போரூர்-கோடம்பாக்கம் பாதையை விரைவில் திறப்பதற்கான இலக்கை வைத்துள்ளனர்.
பணிகள் தீவிரமடைகின்றன
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் I நீட்டிப்பு வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, கட்டம் II-ல் 118.9 கிமீ நீளத்திற்கு 128 மெட்ரோ நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி (26.1 கிமீ) வழித்தடம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, பல்வேறு மேம்பாலப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முக்கிய கட்டத்தைக் கடந்த மெட்ரோ
மெட்ரோ நிறுவனத்திற்கான முக்கியமான முன்னேற்றங்களில்,
முல்லைத்தோட்டம் – கரையான்சாவடி இடையே மேம்பாலப் பணிகள் முடிந்துள்ளன.
பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் வரை மோட்டார் டிராலி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
OHE (மேல்நிலை உபகரண) பணிகள் பூந்தமல்லி – முல்லைத்தோட்டம் இடையே தீவிரமடைந்துள்ளன.
பயணிகள் பயன்பாட்டுக்கு எப்போது?
போரூர் – பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவை 2025 இறுதியில் தொடங்கும் என அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மெட்ரோ பணிகள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, மெட்ரோ திட்ட இயக்குநர் திரு.தி.அர்ச்சுனன், உயரதிகாரிகள் மற்றும் பொது மேலாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த மெட்ரோ திட்டம் மிக முக்கியமாக இருக்கிறது. அடுத்த சில மாதங்களில், சோதனை ஓட்டம் தொடங்கி, கட்டம் கட்டமாக மெட்ரோ சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.