சீன அரசு தங்க விற்பனையில் இதுவரை வழங்கப்பட்ட வரிவிலக்கு சலுகையை ரத்து செய்துள்ளது.

2025 நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறையின் படி, ஷாங்காய் தங்க பரிவர்த்தனை மையத்தில் வாங்கப்படும் தங்கத்தை நேரடியாகவோ அல்லது செயல்முறை செய்யப்பட்டபிறகோ விற்பனை செய்யும் போது, விற்பனையாளர்கள் இனி மதிப்புக்கூட்டிய வரியை (VAT) குறைக்க முடியாது என சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த முடிவு, உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் நாடான சீனாவின் தங்க சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் சொத்து சந்தை மந்தநிலை மற்றும் பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்ட அரசின் வருவாயை உயர்த்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறையால் சீன நுகர்வோருக்கு தங்கம் வாங்கும் செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப மாதங்களில், உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்ததால் தங்க விலை புதிய உச்சத்தை தொட்டிருந்தது. எனினும், இந்த வரிவிலக்கு நீக்கம் உலக தங்க விலை சரிவுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதன் மூலம், சீன அரசு தங்க சந்தையில் தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியில் உள்ளது என பொருளாதார வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.








