கோவையில் தங்க நகை தொழில் பூங்கா – பொற்கொல்லர்களுக்கு தமிழக அரசின் ‘தங்க’ பரிசு!

014.jpg

கோவை: கோவையில் ரூ.126 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தங்க நகை தொழில் பூங்கா, ஆயிரக்கணக்கான பொற்கொல்லர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கைவினைஞர்கள் மற்றும் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சமீபத்தில் பல்வேறு தொழிற்பூங்காக்களை தொடங்கிவரும் நிலையில், கோவையிலும் தனித்துவமான தங்க நகை பூங்கா உருவாகவுள்ளது. கடந்த நவம்பரில் முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தபோது, பொற்கொல்லர்கள் அவரை சந்தித்து தங்கள் நீண்டநாள் கோரிக்கையை முன்வைத்தனர். அதனை அங்கீகரித்த முதல்வர், கோவையின் கெம்பட்டி காலனியில் நேரடியாக ஆய்வு செய்து, அதிரடியாக தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இப்போது அந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 2.5 ஏக்கர் நிலத்தில் ரூ.126 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் பூங்கா கட்டப்படவுள்ளது. இதில் NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகம், 5 தள கட்டிடங்கள், 300 தொழிற்சாலைக் கூடங்கள், பாதுகாப்பு பெட்டகம், சிசிடிவி அமைப்புகள், பொதுவசதி மையம் உள்ளிட்டவை இடம்பெறும். இதன் மூலம் 2,000 பேருக்கு நேரடியாகவும், 1,500 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க நகை தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்ததாவது:

“கோயம்புத்தூர் நகைகள் கடந்த 40 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெயர் பெற்றவை. முன்பு குடிசை தொழிலாக இருந்த நகைத் துறை இன்று பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த தங்க நகை பூங்கா, பொற்கொல்லர்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் ‘தீபாவளி போனஸ்’ போன்றதாகும்,” என்று தெரிவித்தனர்.மேலும்,“இந்த பூங்காவில் தயாரிக்கப்படும் நகைகளுக்கு அரசு சார்பாக ஹால்மார்க் முத்திரை பதிக்க வேண்டும். இதனால் 100% பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் கிடைக்கும்,” எனவும் அவர்கள் கூறினர்.

இத்திட்டம் நிறைவேறினால், கோவை மாவட்டத்தில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட நகை பட்டறைகளில் பணிபுரியும் ஒரு லட்சம் பேருக்கு நிரந்தர வருமான வாய்ப்பு உருவாகும் என நம்பப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர நகை நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் எளிதில் கிடைக்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *