கோவை நகை பட்டறை கொள்ளை: 24 மணி நேரத்தில் இருவர் கைது – 1.15 கிலோ தங்கம் மீட்பு

316.jpg

கோவையில் உள்ள தங்க நகை பட்டறையில் மரப்பெட்டியுடன் 1.15 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த இருவரை, காவல்துறை சிறப்பு தனிப்படை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, அனைத்து நகைகளையும் மீட்டது.

கோவை வெரைட்டி ஹால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாமியார்ஐயர் வீதியில் நவநீதகிருஷ்ணன் நடத்தி வரும் தங்க நகை பட்டறையின் கதவு டிசம்பர் 7-ஆம் தேதி இரவு உடைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்து பட்டறைக்கு வந்த அவர், 1.15 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

புகார் பெற்ற காவல்துறை நான்கு தனிப்படைகளை அமைத்து விசாரணை ஆரம்பித்தது. சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், கொள்ளையில் ஈடுபட்ட முருகன் மற்றும் சின்னதுரை எனும் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் உறவினர்கள் என்பதும் விசாரணையில் வெளிப்பட்டது. இவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து தங்க நகைகளும் உடன் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை தெற்கு மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

கொள்ளையர்கள் கணுவாய் பகுதியில் உள்ள வீட்டில் மரப்பெட்டியுடன் நகைகளை மறைத்து வைத்திருந்தனர். சம்பவத்தன்று இரவு 2:30 மணியளவில் முதலில் மற்றொரு கடையை உடைக்க முயன்றும், அது இரும்புக் கதவு என்பதால் விட்டுவிட்டு இந்த பட்டறையை குறிவைத்து கொலைத்தனர்.

கைது செய்யப்பட்ட முருகன், முன்பு ஆர்.எஸ். புரம் பகுதியில் நகைக்கடையை உடைத்து திருடிய வழக்கில் தண்டனை பெற்று வந்தவர். சின்னதுரைக்கு தூத்துக்குடியில் கொள்ளை, கஞ்சா போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியிலுள்ள மண் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களில் தங்கத் துகள்களைச் சேகரிக்கும் வேலை செய்துவந்ததால், இந்த பட்டறையின் செயல்பாடு குறித்து முறையாக அறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் :

  • நகை கடைகள் மற்றும் பட்டறைகளில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும்.

  • இரும்புக் கதவுகள் அமைத்திருக்க வேண்டும்.

  • முக்கிய சாலைகளிலும் சந்திப்புகளிலும் கூடுதல் கேமராக்கள் பொருத்தப் பட வேண்டும்.

    Summary :

    Coimbatore police crack 1.15 kg gold heist in 24 hours, arresting two suspects and recovering all stolen jewellery; safety alerts issued to jewellers.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *