சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை விளக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த வேலுமணி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்தங்களை வழங்கும் போது ரூ.98 கோடியே 25 லட்சம் மதிப்பிலான முறைகேடுகள் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தபோது, வழக்கு தொடர்பான ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.
ஆனால், இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அனுமதி பெற 19 மாதங்கள் எடுத்துக் கொண்டதற்கான காரணம் குறித்து நீதிபதி கடும் கேள்வி எழுப்பினார். மேலும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமெனவும், இல்லாவிட்டால் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர் எனவும் நீதிபதி எச்சரித்தார்.
இவ்வழக்கை மேலும் விசாரிக்க நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தாமதத்திற்கு காரணம் குறித்து விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டது.
Summary :
Madras High Court questions why it took 19 months to seek approval for prosecuting IAS officers in ex-minister Velumani’s graft case.








