“என் தாய்நாடு இந்தியா” – பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு குடியேறப்போகிறார் என்ற வதந்திக்கு விளக்கம் அளித்த டேனிஷ் கனேரியா

image-1.png

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த முதல் இந்து வீரராகப் பெயர் பெற்ற டேனிஷ் கனேரியா, “என் முன்னோர்கள் வாழ்ந்த பாரத் (இந்தியா) என் தாய்நாடு” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் இந்தியாவுக்கு குடியேறப்போகிறார் என்ற செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து, அதற்கு அவர் நேரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக இருப்பதால், அந்நாட்டு கிரிக்கெட் அணியில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம் வீரர்களே. அதில் முதல் முறையாக இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளத்துடன் விளையாடியவர் டேனிஷ் கனேரியா. அவரது குடும்பம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தது.

2000 முதல் 2010 வரை பாகிஸ்தான் அணிக்காக லெக் ஸ்பின்னராக சிறப்பாக விளையாடிய அவர், பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு இந்தியாவை பற்றி அடிக்கடி பாராட்டுக்குரிய பதிவுகளை எக்ஸ் (Twitter) தளத்தில் பகிர்ந்து வந்தார்.

சமீபத்தில், டேனிஷ் கனேரியா பாகிஸ்தானை விட்டு இந்தியாவில் குடியேற திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பதிலளித்த அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியதாவது:

“பலர் என்னிடம், நான் ஏன் பாகிஸ்தான் குறித்து பேசவில்லை? ஏன் இந்திய உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்கிறேன்? என்று கேட்கிறார்கள். மேலும், சிலர் ‘இந்திய குடியுரிமை பெறுவதற்காகத்தான் இப்படி பேசுகிறேன்’ என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன் — பாகிஸ்தான் என்பது நான் வாழும் பூமியாக இருக்கலாம். ஆனால் எனது முன்னோர்கள் வாழ்ந்த பாரத் (இந்தியா) தான் என் தாய்நாடு. பாரத் எனக்கு கோயிலுக்கு இணையானது.

தற்போது இந்தியாவில் குடியுரிமை பெற எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் என்னைப்போன்றோர் இந்தியாவில் குடியேற விரும்பினால், சிஏஏ சட்டத்தின் கீழ் (CAA) அதைச் செய்யலாம்,”
என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் டேனிஷ் கனேரியா தற்போது இந்தியாவுக்கு குடியேறும் திட்டம் இல்லையெனவும், ஆனால் இந்திய வேர்களைக் கொண்டவர்கள் விரும்பினால் சிஏஏ சட்டத்தின் மூலம் குடியேறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *