திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகக் கூறி கவலை தெரிவித்தார். ஏற்கனவே ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 36 லட்சம் பேரை இணைத்து வழங்குவதாக அறிவித்திருப்பதில் பெருமைப்பட எதுவும் இல்லை என்றும் விமர்சித்தார்.

60 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆட்சிகள் தொடர்ந்தாலும், பெண்கள் தினசரி ரூ.30 கூட சம்பாதிக்க முடியாத நிலையே உருவாகியுள்ளது என்பதே உண்மை என்று குற்றம் சாட்டினார். இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் வரவிருப்பதால், வாக்கு நோக்கில் கூடுதல் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படுவதாகவும், “இந்த கூடுதல் நபர்களுக்கு கடந்த ஆண்டு ஏன் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினார்.
தன்மானம் கொண்ட தமிழன், தனது தாய் ரூ.1000 பெற கையேந்தி நிற்பதை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றும், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டாலும், அந்தச் செலவை அவர்களின் தந்தையோ சகோதரரோ ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் சாடினார். ஆளும் கட்சிகள் செய்தி மற்றும் விளம்பர அரசியலுக்குள் சிக்கிக் கொண்டு, சேவை மற்றும் மக்கள் அரசியலுக்கு வரவில்லை என்றும், உண்மையான மக்கள் அரசியல் இருந்திருந்தால் மக்கள் உழைத்து சம்பாதிக்க வசதிகள் உருவாக்கப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.
மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பும் தேர்தலைக் குறிவைத்த நடவடிக்கையே என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் எந்த அமைச்சர் துறையிலும் ஊழல் இல்லை என்று கூற முடியுமா என்றும், தேர்தல் நெருங்கும் போதுதான் ஏன் அக்கறை வருகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
ரூ.10 லட்சம் கோடி கடனை ஏற்படுத்திய திமுக அரசு, ஒரு முக்கிய நலத்திட்டத்தை செயல்படுத்தியதாகக் கூற முடியுமா என்றும் விமர்சித்த சீமான், “இடி வந்தால் டாடி, மோடியைப் பார்க்க ஓடுகிறார்கள்” என்றார். மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் பங்கேற்காத முதல்வர், இப்போது ஏன் திடீரென சென்றார் என்றும் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் வளர்ச்சியை உண்மையாக சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுள் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்றும், இதுவரை முருகன் மீது காட்டாத பாசம் இப்போது ஏன் திடீரென வெளிப்படுகிறது என்றும் அவர் வினவினார். காவிரி நீர் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தாதவர்கள், அயோத்தி விவகாரத்தை வைத்து அரசியல் செய்ததாகவும், ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்ததால், தற்போது முருகனை முன்வைத்து திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியலாக்க முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சிக்கு பா.ஜ.க. வித்திட்டதாக கருணாநிதி பாராட்டியதை நினைவூட்டிய அவர், பா.ஜ.க. வளர்ச்சிக்கு தி.மு.க. தான் காரணம் என்றும், பா.ஜ.க.க்கு அரசியல் திட்டங்களை வகுத்துக் கொடுப்பதும் தி.மு.க. தான் என்றும் குற்றம் சாட்டினார். “பா.ஜ.க. வந்துவிடுவார்கள்” என்று பயமுறுத்தி சிறுபான்மை வாக்குகளைத் தக்கவைக்க தி.மு.க. அரசியல் செய்கிறது என்றும் கூறினார்.
இறுதியாக, இந்துக்களின் பாதுகாவலர்கள் போல பா.ஜ.க. அரசியல் செய்வதாகவும், ஆர்எஸ்எஸ் மேடையில் பாரதி குறித்து பேசியதுபோல, திமுக மேடையிலும் பேசத் தயார் என்றும் தெரிவித்தார். “தமிழ் என் தாய். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் பேசியது அப்போது இனித்ததா?” என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
Summary :
NTK chief Seeman says DMK is responsible for BJP’s growth, criticises welfare schemes, debt burden, and accuses ruling parties of election-driven politics.








