தமிழ் திரைப்படத்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இனிமேல் “லேடி சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
*”என் வாழ்க்கை எப்போதும் திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதை மேலும் அழகாக்கியுள்ளது. வெற்றி சந்தர்ப்பங்களில் எனக்கு வாழ்த்து சொல்லியும், சிரம நேரங்களில் என்னை ஊக்குவித்தும் நீங்கள் என்றும் அருகில் இருந்தீர்கள்.
நீங்கள் அனைவரும் என்னை அன்போடு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வந்ததை நான் கொண்டாடுகிறேன். உங்கள் பேராதரவால் வந்த இந்தப் பட்டத்திற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஆனால் இனிமேல், தயவுசெய்து என்னை ‘நயன்தாரா’ என்றே அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமானது. அது எனது தனிப்பட்ட அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது. பட்டங்கள், விருதுகள் முக்கியமானவைதான், ஆனால் சில நேரங்களில் அவை நம்மை நம்முடைய கலை மற்றும் பார்வையாளர்களிடமிருந்து தொலைவாக்கக்கூடும். நம்மை ஒன்றாக இணைக்கும் மொழியான அன்பை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளலாம். எதிர்காலம் எதைக் கொண்டுவந்தாலும், உங்கள் ஆதரவு என்றும் நிலைத்து இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நீங்கள் அனைவரையும் மகிழ்விக்க எனது உழைப்பு தொடர்ந்து இருக்கும். சினிமா நம்மை இணைத்துள்ளது, அதை நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடலாம்!”* என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பாக நடிகர்கள் அஜித் மற்றும் கமல் ஆகியோரும் எந்தவொரு புனைப்பெயரையும் வேண்டாம் என தெரிவித்து, தங்கள் பெயர்களால் மட்டுமே அழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். அந்த வரிசையில் தற்போது நயன்தாராவும் இணைந்துள்ளார்.