You are currently viewing மகன் செய்த விபத்து – தந்தை கைது!

மகன் செய்த விபத்து – தந்தை கைது!

0
0

பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு பதிலாக தந்தை கைது

புதுச்சேரி, காலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 45 வயதுடைய சபாபதி என்பவர் கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி அவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக, சிறுவன் ஒருவன் ஓட்டி வந்த பைக், சபாபதி ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சபாபதிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

இந்த விபத்து குறித்து சபாபதியின் மனைவி ஆனந்தி, போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கீழ்புத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் தான் அந்த விபத்தை இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து ஏற்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

இதன் காரணமாக, புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கடுமையான விதிகளின்படி, அந்தச் சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை விஜயகாந்த் (வயது 43), கூலித் தொழிலாளி, குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறுவனுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டான்.

மேலும், அந்த விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது என்றும், சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவுச் சான்றிதழை 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

Summary: In Puducherry, the father of a minor boy who caused a bike accident injuring a 45-year-old man has been arrested under stricter motor vehicle laws. The father was held responsible for allowing his underage son to drive. While the father received conditional bail, the minor was warned, and authorities have recommended delaying his driving license until age 25 and suspending the bike’s registration for 12 months.

Leave a Reply