திண்டுக்கல் சிறுமலையில் காட்டுத்தீ – பக்தர்கள் அதிர்ச்சி

0052.jpg

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் உள்ள சிவன் கோவில் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட காட்டுத்தீ பரபரப்பை ஏற்படுத்தியது. தீ வேகமாக பரவியதால் ஏராளமான மரங்கள் மற்றும் செடிகள் எரிந்தன. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பு. தற்போது வெயில் அதிகமாக உள்ளதால், ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் காட்டுத்தீ பரவுவது வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக வனப்பகுதிகள் பெரிதும் சேதமடைந்து வருகின்றன.

சிறுமலை, திண்டுக்கல் நகரத்திற்கு 25 கிமீ தொலைவிலும், மதுரைக்கு 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்ப சிறிய மலையாக இருந்தாலும், இது அடர்ந்த வனப்பகுதியாகும். கொடைக்கானலைப் போல இல்லை என்றாலும், இங்கு நவம்பர் முதல் ஜனவரி வரை தங்கும் காலநிலை சுற்றுலாவிற்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் பிப்ரவரி பிற்பகுதியிலிருந்து வெப்பம் அதிகரிக்க தொடங்குகிறது.

சிறுமலையில் அதிகமான மரங்கள் இருப்பதால், கடும் வெயிலிலும் அது கணிசமாக உணரப்படுவதில்லை. இந்த பகுதியில் பல்வேறு வனவிலங்குகள் வாழ்கின்றன. சிறுமலையில் விளையும் மலை வாழைப்பழங்கள் மிகவும் இனிப்பாக இருக்கும் என்பதால், வெளியூர்களில் சிறுமலை வாழைக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் கொடைக்கானல் – பழநி சாலையின் மேல்பள்ளம் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, மளமளவென பரவி ஏராளமான வனப்பகுதிகளை சேதப்படுத்தியது. அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர், பின்னர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். இதேபோல், கொடைக்கானல் கார்மேல்புரம் குடியிருப்பு பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீயும் அதிக சேதத்தை ஏற்படுத்தியது.

இன்று அதிகாலை சிறுமலை சிவன் கோவில் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிவராத்திரி கொண்டாட வந்த பக்தர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் வழங்கியதால், வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடப்பு சூழலில் கோடைக்காலத்தின் வெப்பம் அதிகரித்து வருவதால், வனப்பகுதிகளை காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க வனத்துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *