புதுச்சேரி: புதுவையில் நடைபெற்ற விஜய் பிரசார பொதுக்கூட்டத்தில் துப்பாக்கியுடன் வந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், மத்திய பாதுகாப்பு படை (CRPF) வீரராக 24 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. காலை 6 மணியளவில் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வர தொடங்கினர். போக்குவரத்து கட்டுப்பாட்டுக்காக உப்பளம் சாலையில் 5 இடங்களில் பேரி கார்டுகள் அமைத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
பொதுக்கூட்ட இடத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் நுழைவு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது காலை 8 மணியளவில் ஒருவர் மெட்டல் டிடெக்டரை கடக்கும்போது எச்சரிக்கை ஒலி எழுந்தது. உடனே போலீசார் அவரை விசாரித்த போது இடுப்பில் துப்பாக்கி இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த நபர், டேவிட் எனவும், தனது துப்பாக்கிக்கு சட்டபூர்வமான அனுமதி இருப்பதையும் போலீசாரிடம் காட்டினார். மேலும், விசாரணையில் அவர் 24 ஆண்டுகள் CRPF-இல் பணியாற்றியவர் என்றும், த.வெ.க. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவின் தனிப்பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் என்றும் தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், டேவிட் கடந்த வாரம் மட்டும் பிரபுவிடம் பணியில் சேர்ந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தற்போது அவரது நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Summary :
A former CRPF personnel was arrested for carrying a licensed gun at Vijay’s rally in Puducherry. Police are investigating the security breach.








