Heat Rash Prevention |கோடை வேர்க்குரு வேதனை நீங்க!

Heat Rash Prevention

வியர்வையைத் தள்ளு, வேர்க்குருவுக்கு முற்றுப்புள்ளி! – Heat Rash Prevention

Heat Rash Prevention – வேர்க்குரு வராமல் தடுக்கும் வழிமுறைகள்

பொதுவாக கோடை காலத்தில் சிலருக்கு வேர்க்குரு தொல்லையால் உடலில் அரிப்பு ஏற்படுவது சகஜம். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பிரச்சினை ஏற்படும்போது, அரிப்பு தீவிரமடைந்தால் ஒருவித அச்சம் உண்டாகிறது.

வேர்க்குருவுக்கும் நீரிழிவு நோய்க்கும் இடையே ஏதேனும் தொடர்பு உண்டா? இதனைத் தவிர்க்கும் வழிகள் என்னென்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

வேர்க்குரு அல்லது வெப்ப சொறி மருத்துவ மொழியில் மிலியாரியா என்று குறிப்பிடப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. முகம், கழுத்து, மார்பு, இடுப்பு, அக்குள் மற்றும் தொடைகளில் வேர்க்குரு பொதுவாகக் காணப்படுகிறது.

கோடை காலத்தில் நிலவும் அதிக வெப்பமும் ஈரப்பதமும் வியர்வை சுரப்பிகளில் இறந்த தோல் செல்கள் மற்றும் ஸ்டெபைலோகாக்கஸ் எபிடெர்மிடிஸ் போன்ற பாக்டீரியாக்களால் அடைப்பை ஏற்படுத்தும் போது வேர்க்குரு உருவாகிறது.

இது மிலியாரியா கிரிஸ்டலினா (படிக வேர்க்குரு), மிலியாரியா ருப்ரா (சிவப்பு வேர்க்குரு), மிலியாரியா ப்ரோஃபுண்டா (உட்புற வேர்க்குரு) என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது.

வேர்க்குரு ஏற்பட முக்கிய காரணிகள் :

1.வியர்வை சுரப்பிகள் முழுமையாக வளர்ச்சியடையாத நிலை (குழந்தைகள்)
2.அதிக வெப்பம் அல்லது ஈரப்பதம் நிறைந்த சூழல்
3.காய்ச்சல்
4.தீவிர உடற்பயிற்சி
5.பரம்பரை காரணிகள்
6.சில மருந்துகளின் பக்க விளைவுகள் (டையூரிடிக்ஸ்)
7.உடல் பருமன்
8.நீரிழிவு நோய்
9.புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்

நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் காணப்படும் நரம்பு பாதிப்பு (நியூரோபதி) மற்றும் இரத்த நாளங்களின் அடைப்புகள் (பெரிபெரல் வாஸ்குலர் நோய்) தோல் வறட்சியை உண்டாக்கி வேர்க்குரு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

வேர்க்குருவை தடுக்கும் வழிகள் :

1.காற்றோட்டமான, குளிர்ச்சியான படுக்கை அறையில் உறங்குவது நல்லது.

2.ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, மெல்லிய பருத்தியால் ஆன தளர்வான
ஆடைகளை அணிய வேண்டும். பாலியஸ்டர் துணிகளைத் தவிர்க்கவும்.

3.சருமத்திற்கு எரிச்சலூட்டும் வாசனை திரவியங்கள் கலந்த சோப்பு மற்றும் பிற அழகு சாதனப்
பொருட்களை உபயோகிக்கக் கூடாது.

4.வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்பை ஈடுசெய்ய குறைந்தபட்சம் தினமும் 3 முதல் 4 லிட்டர்
வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

5.வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதைத்
தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே செல்ல நேர்ந்தால், குடை அல்லது
தொப்பியைப் பயன்படுத்தவும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.

6.நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் போன்றவற்றை
உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

7.தினமும் குறைந்தது இரண்டு முறையாவது குளிப்பது நல்லது.

8.புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

பொதுவாக, வேர்க்குரு குளிர்ந்த சூழலுக்குச் சென்றவுடன் தானாகவே சரியாகிவிடும். அரிப்பு குறையவில்லை என்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று காலமைன் லோஷன் அல்லது ஸ்டீராய்டு கிரீம்களைப் பயன்படுத்தலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *