துபாய்: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதியில், பாகிஸ்தானை வீழ்த்தி 9வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணி, வெற்றி பெற்றும் கோப்பை மற்றும் பதக்கங்களை பெறாமல் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
இது ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த முதலாவது இறுதி போட்டி. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் ஏற்கனவே இரு முறை பாகிஸ்தானை தோற்கடித்திருந்த இந்தியா, இறுதியிலும் வெற்றி பெற்று அபார சாதனை படைத்தது.

ஆனால் போட்டி முடிந்ததும் சூழல் மாறியது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மற்றும் பாகிஸ்தான் அமைச்சரான மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பை பெறுவதை இந்திய வீரர்கள் மறுத்தனர். “அவரின் கையிலிருந்து கோப்பையோ, பதக்கமோ எடுக்க மாட்டோம்” என்ற இந்திய அணியின் நிலைப்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததால் இந்தியா புறக்கணிப்பில் உறுதியானது எனவும் கூறப்படுகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேர தாமதத்துக்குப் பிறகே மேடையில் நிகழ்ச்சி தொடங்கியது. தொகுப்பாளர் சைமன் டவுல், “இந்தியா கோப்பையை வாங்க மறுத்துவிட்டது” என்று அறிவித்தார்.
கடைசியில், பாகிஸ்தான் வீரர்களுக்கே பதக்கம் மற்றும் ரன்னர்-அப் கோப்பை வழங்கப்பட்டது. இந்திய வீரர்கள் எந்தப் பரிசையும் ஏற்காமல் நேரடியாக ஹோட்டலுக்குத் திரும்பினர். நக்வி கோப்பையுடன் மைதானத்தை விட்டு சென்றது அந்த இரவின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.
மைதானத்தில் இந்திய ரசிகர்கள் “பாரத் மாதா கி ஜெய்” என கோஷமிட்டதோடு, பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் சத்தமாக ஆரவாரம் செய்தனர். இறுதியில், இந்தியா வெற்றி கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தாலும், கோப்பையும் பதக்கமும் புறக்கணித்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது.