அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ளார்.

ரஷ்யா–உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா பலமுறை எதிர்த்து வந்தது. இதனால், அமெரிக்கா இந்தியாவுக்கு 50% வரி விதித்தது. இது இருநாடுகளுக்கு இடையே சிறிய சலசலப்பை உருவாக்கியது.
எனினும், இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை மெல்ல குறைத்து வந்ததாக டிரம்ப் முன்பே குறிப்பிட்டிருந்தார். தற்போது, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்தி விட்டது என அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி “நல்ல தலைவராக” இருப்பதாக பாராட்டிய டிரம்ப், “இந்தியாவின் இந்த முடிவு சரியானதும், பாராட்டத்தக்கதுமாகும்” என்றார்.
அத்துடன், மோடி தன்னை இந்தியாவுக்கு வருமாறு அழைத்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டிரம்ப், “உலகளவில் சமீபத்திய எட்டு போர்களை நான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். அவற்றில் ஆறு போர்களை வரி விதிப்புகள் மூலமாகவே முடித்து வைத்தேன்” என்றும் கூறினார்.
Summary :
Donald Trump announces India’s halt on Russian crude imports, praises PM Modi, and confirms his India visit planned for next year.









