மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் நடந்த கண்ணன் கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மயிலாடுதுறை காவல் சரகத்தில் 2021 நவம்பர் 20 அன்று, கண்ணன் (27) மற்றும் கதிரவன் (41) இடையே டிபன் கடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியது. இதையடுத்து, கதிரவன் தரப்பினர் கண்ணனை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த தகராறு தொடர்ச்சியாக 2022 ஆகஸ்ட் 17 அன்று கண்ணன் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, கதிரவன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து கண்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். கண்ணனுடன் இருந்த ரஞ்சித் காயமடைந்தார்.
இச்சம்பவத்தில் கதிரவன் உட்பட 22 பேர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 5 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலன்விசாரணை முடிவில் 21 குற்றவாளிகள் மீது மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில், நீதிபதி சத்தியமூர்த்தி நேற்று (31.10.2025) தீர்ப்பளித்தார்.
அதில், கதிரவன், தேவா (மகாதேவன்), சேது, சந்தோஷ், திவாகர், கார்த்திக், சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணியன், முருகவேல், பிரித்விராஜ் ஆகியோர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். இதில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் கடலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இவ்வழக்கில் திறம்பட பணியாற்றிய அரசு வழக்கறிஞர் இரா. சேயோன், புலன்விசாரணை அலுவலர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் செல்வம், சிவக்குமார், மாரிமுத்து ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.
Summary :
Nine accused in the Mayiladuthurai murder case have been sentenced to life imprisonment by the district court after trial and investigation.








