சிவகங்கை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழகமெங்கும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதன் ஒரு பகுதியாக சிவகங்கையிலும் பெரும் திரளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடப்பதாகவும், வெளிமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சூழல் உருவாகி வருவதாகவும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த நடவடிக்கை ஜனநாயக அடித்தளத்தை பாதிக்கும் என கூறி, உடனடியாக இந்த எஸ்.ஐ.ஆர். திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி, நகர்மன்ற தலைவர் துரை ஆனந்த் ஆகியோர் தலைமையிலான ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் மாவட்ட அமைப்பாளர் பெரியார் குணா ஹாசன், “சென்னை அறிவாலயத்தில் மநீம உறுப்பினர்கள் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்கள் என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், பாஜகவை வீழ்த்த வேண்டுமானால், நாங்கள் கழிவறையையும் கழுவத் தயாராக இருக்கிறோம்!” என உரத்த குரலில் தெரிவித்தார்.
முன்னதாக மநீம தலைவர் கமல்ஹாசனும், “சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தத்தை அவசரமாக நடத்துவது தேவையில்லை. இது வாக்குரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, 2026 தேர்தலுக்குப் பிறகே முழுமையான திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே மநீம இன்று திமுக கூட்டணியுடன் இணைந்து எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக சிவகங்கையில் தீவிர ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Summary :
MNM joins DMK alliance protest in Sivaganga against voter list revision; Periyar Guna says he is ready to clean toilets to defeat BJP.








