பயங்கரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்ததாக நொய்டாவை சேர்ந்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார், நண்பராக மாறிய எதிரியை சிக்க வைக்க விரும்பினார்.
லஷ்கர்-இ-ஜிஹாதியைச் சேர்ந்த 14 பயங்கரவாதிகள் 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளுடன் மும்பைக்குள் நுழைந்து, மிகப்பெரிய குண்டுவெடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக மும்பை காவல்துறைக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பியுள்ளார்.
மும்பையில் விநாயகர் விழாவின் போது குண்டுவெடிப்பு குறித்து மிரட்டல் செய்தி வெளியிட்டதற்காக நொய்டாவின் செக்டர்-79-ல் இருந்து 50 வயது நபர் ஒருவரை சனிக்கிழமை மும்பை போலீசார் கைது செய்தனர். பாட்னாவைச் சேர்ந்த அஸ்வின் குமார் சுப்ரா கடந்த ஐந்து ஆண்டுகளாக நொய்டாவின் செக்டர் 79-ல் வசித்து வருகிறார். இவர், ஜோதிடர் மற்றும் வாஸ்து ஆலோசகராக இருந்து வருகிறார்.
லஷ்கர்-இ-ஜிஹாதியைச் சேர்ந்த 14 பயங்கரவாதிகள் 34 வாகனங்களில் 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் உடன் மும்பைக்குள் நுழைந்து, ஒரு கோடி பேர் வரை கொல்லப்படக்கூடிய பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட அஸ்வின் குமார் சுப்ரா வியாழக்கிழமை இரவு மும்பை காவல்துறைக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பியிருந்தார்.
மிரட்டல் வந்ததும், மும்பை காவல்துறை அதிகாரிகளால் உயர் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது, மேலும் இந்த வழக்கானது மும்பை குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேசமயம், பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளும் உஷார்படுத்தப்பட்டன.
காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆகிய இரண்டும் இந்தச் செய்தியைப் பெற்றன, இது உடனடி பாதுகாப்பு மறுஆய்வுக்கு வழிவகுத்தது. விசாரணைக்குப் பிறகு, குற்றப்பிரிவு போலீசார் அஸ்வின் குமாரை நொய்டாவில் கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது மொபைல் போன், சிம் கார்டு, நான்கு கூடுதல் சிம் கார்டு, ஆறு மெமரி கார்டுகள், ஒரு வெளிப்புற சிம் ஸ்லாட் மற்றும் மிரட்டல் செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்ட இரண்டு டிஜிட்டல் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீஸ் வட்டாரங்களின் செய்திப்படி விசாரணையின் போது வெளிவந்த தகவலானது – பீகாரைச் சேர்ந்த ஃபிரோஸை பழிவாங்கும் விதமாக அஸ்வின் குமார் இந்த மிரட்டல் செய்தியை அனுப்பியதாக தெரிவித்தார். அவருடைய நண்பரான ஃபிரோஸ் என்பவர் பீகாரைச் சேர்ந்தவர். ஏற்கனவே, 2023 ஆம் ஆண்டு, ஃபிரோஸ் செய்த மோசடி வழக்கு காரணமாக அஸ்வின் மூன்று மாதங்கள் பாட்னா சிறையில் இருந்துள்ளார். மோசடி வழக்கு குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை என்றாலும், அதிகாரிகளை தவறாக வழிநடத்த ஃபிரோஸின் பெயரைப் பயன்படுத்தினார்.
பாரதீய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 196(1)(a)(b), 351(2), 351(3), மற்றும் 351(4)-ன் கீழ் குற்ற எண். 381/25 கொண்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரியான அஸ்வின் குமார், அவரது மனைவி அர்ச்சனா அவரை விட்டு பிரிந்ததால் விவாகரத்து பெற்றவர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதோடு அவருக்கு பணப்பிரச்னைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில், பாட்னாவில் உள்ள புல்வாரி ஷெரிப் காவல் நிலையத்தில் ஃபிரோஸ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, அவர் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பை வெடிகுண்டு மிரட்டல்களை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல. ஆகஸ்ட் 25 அன்று, தானேயில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது, பின்னர் அது ஒரு புரளி என்று தெரியவந்தது. அந்த வழக்கில் 43 வயதான ரூபேஷ் மதுகர் ரன்பிஸ் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், மும்பை குற்றப்பிரிவு போலீசார் அஷ்வின் குமாரை மேல்விசாரணிக்காக மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அதிகாரிகள், விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலின் நம்பகத்தன்மையை தொடர்ந்து சரிபார்த்து வருகின்றனர். மேலும் நடந்து வரும் விநாயகர் சதூர்தியின் போது ஏதேனும் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளதா என்பதையும் கண்காணித்து வருகின்றனர்.








