சென்னை: “தேசிய புலனாய்வு முகமை (NIA), வருமான வரித்துறை, உளவுத்துறை, ரயில்வே மற்றும் அமலாக்கத்துறையில் வேலை வாங்கித் தருவோம்” எனக் கூறி, பலரை ஏமாற்றிய பாஜக பிரமுகர் மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். வெறும் விசிட்டிங் கார்டுகளால் நம்பிக்கை ஏற்படுத்தி, லட்சக்கணக்கில் பணம் பறித்த தம்பதி மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
வேலை வாங்கித் தருவோம் – மோசடி பேர்வழிகள்!
அரசு வேலை பெற்றுத் தருவதாக கூறி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், சென்னை பல்லாவரத்தில் நடந்த புதிய மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ஜெயராமன் – அஸ்வினி?
பல்லாவரம் அருகே பொழிச்சலூர் துரைக்கண்ணு தெருவைச் சேர்ந்த ஜெயராமன், பாஜக செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு துறை துணைத் தலைவர். அவரது மனைவி அஸ்வினி, பாஜக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்.இவர்கள் “Young Sports of India” என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வந்தனர். அலுவலகத்தில் “நான் ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர், இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் டீமில் நடுவர்” என குறிப்பிட்ட விசிட்டிங் கார்டுகளையும் தயார் செய்திருந்தனர்.மேலும், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தான் நெருக்கமாக உள்ளேன் என போலியான புகைப்படங்களை உருவாக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தினர்.
அலுவலகமே மோசடிக்கான அட்டகாச மையம்!
அலுவலகம் வரும் நபர்களிடம், “NIA, வருமான வரித்துறை, ரயில்வே, உளவுத்துறை மற்றும் அமலாக்கத்துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டில் அரசு வேலை வாங்கித் தருவோம்” எனக் கூறி, பலரை ஏமாற்றியுள்ளனர்.மக்கள் இவர்களை நம்பி லட்சக்கணக்கில் பணம் கொடுத்தனர். ஆனால் வேலை கிடைக்காமல், “இன்று போங்கள், நாளைக்கு வாருங்கள்” என இழுத்தடித்துள்ளனர்.
பிரகாசமான எதிர்காலம் எதிர்பார்த்தவர்களுக்கு பேரிழப்பு
பல மாதங்களாக வேலை கிடைக்காததை உணர்ந்த லோகேஷ் குமார் என்பவர், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து வழக்கு சங்கர் நகர் காவல் நிலையத்திற்குப் மாற்றப்பட்டு, பாஜக பிரமுகர் ஜெயராமன், அவரது மனைவி அஸ்வினி மற்றும் அலுவலக உதவியாளர் பிரியாவை தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி பேர்வழிகள் வலைவீச்சில்.. எப்போது கைது?
போலீசார் தற்போது ஜெயராமன் தம்பதியை பிடிக்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் கைது எப்போது? என்பது பெரிய கேள்வியாக மாறியுள்ளது.