லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகம் முழுவதும் திரைப்பட விருதுகளில் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 97வது ஆஸ்கர் விழாவில், இந்தியாவிலிருந்து ஒரே படமாக நாமினேட் செய்யப்பட்ட பிரியங்கா சோப்ராவின் ‘அனுஜா’ குறும்படம் விருதை வெல்லத் தவறியது, இது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்கர் 2025 – இந்தியாவின் பெரும் எதிர்பார்ப்பு
ஆஸ்கர் விருதுகள் உலகம் முழுவதும் மிகுந்த பிரபலமடைந்த திரை விருதாகும். ஹாலிவுட் மட்டுமின்றி, மொத்த உலகத் திரையுலகமும் ஆஸ்கர் விழாவை கொண்டாடும். இந்த ஆண்டு, 97வது ஆஸ்கர் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்றது, 2024 வெளியான படங்களை கௌரவிக்கும் விதமாக 23 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த விழாவில் இந்தியாவிலிருந்து ஒரே ஒரு படமாக ‘அனுஜா’ குறும்படம் மட்டுமே ஆஸ்கருக்கு நாமினேட் செய்யப்பட்டது. டெல்லியில் வசிக்கும் 9 வயது சிறுமியும், அவளது சகோதரியின் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரியங்கா சோப்ரா, குனீத் மோங்கா, சுசித்ரா மட்டாய் ஆகியோரின் தயாரிப்பில் உருவான இப்படம், இந்திய ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது.
ஆஸ்கரை கைப்பற்றியது ‘I Am Not a Robot’
அனுஜா படத்திற்கும், அதன் தயாரிப்பாளர்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘I Am Not a Robot’ தட்டிச் சென்றது. இதனால், இந்தியா இந்த ஆண்டு எந்த ஆஸ்கர் விருதையும் வெல்ல முடியவில்லை.
இந்த முடிவு இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், எதிர்பார்ப்புகளுக்கு எதிரான முடிவாகவும் அமைந்துள்ளது.