மியான்மாரில் இருந்து 70 ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, மலேசியா கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து பெரும் துயரச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அந்த படகு, தாய்லாந்து – மலேசியா கடல் எல்லைக்கு அருகே கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்ததுடன், 13 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் குறித்து தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலேசிய கடல்சார் அமைப்பின் தகவலின்படி, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மியான்மாரின் ரக்கைன் மாநிலம் இலிருந்து புறப்பட்ட அந்தப் படகு, லாங்காவி தீவு அருகே மூழ்கியுள்ளது. தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து, சுமார் 170 கடல் மைல்கள் பரப்பளவில் வான்வழி மற்றும் கடல்வழி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மலேசிய கடல்சார் பாதுகாப்பு அதிகாரி ரொம்லி முஸ்தபா கூறியதாவது:
“தாய்லாந்து அமைப்புகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் தேடுதல் நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கை சுமார் ஏழு நாட்கள் வரை நீடிக்கக்கூடும்,” என்றார்.
மீட்கப்பட்ட 13 பேரில் 11 ரோஹிங்கியர்களும், 2 பங்களாதேஷ் நாட்டு மக்களும் அடங்குவதாகவும், படகு புதியதாக் என்ற ரக்கைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மியான்மாரில் குடியுரிமையற்ற முஸ்லிம் சிறுபான்மை சமூகமான ரோஹிங்கியர்கள், பல ஆண்டுகளாக வன்முறை, பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பான வாழ்க்கைக்காக அவர்கள் மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
ஐ.நா. தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும் 5,100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியர்கள் படகுகளில் புறப்பட்டுள்ள நிலையில், 600 பேர் உயிரிழந்ததாகவும் காணாமல் போனதாகவும் பதிவாகியுள்ளது.
முன்பு மலேசியா மனிதாபிமான காரணங்களுக்காக ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொண்டிருந்தாலும், தற்போது வளங்களின் பற்றாக்குறையால் வருகைகளை கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது மலேசியாவில் 1,17,000க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.








