சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு, நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை இரண்டு மாத காலத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பம்பை வரை இந்தப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தமிழ் மாதம் கார்த்திகை 1-ம் தேதி (நவம்பர் 17) முதல் மாலை அணிந்து விரதம் இருந்து, இருமுடி கட்டிச் சபரிமலை பயணம் மேற்கொள்கிறார்கள். இதனை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சபரிமலை பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை (கோயம்பேடு, கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை, புதுச்சேரி மற்றும் கடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பம்பைக்கு இயக்கப்படும்.
டிசம்பர் 27 முதல் 30 வரை சபரிமலை கோயிலின் நடை மூடப்படுவதால், அன்றைய நாட்களில் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்காக அல்ட்ரா டீலக்ஸ், ஏசி, நான்ஏசி, சீட்டர் மற்றும் ஸ்லீப்பர் வகை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு சேவை www.tnstc.in மற்றும் TNSTC Official App வழியாக 60 நாட்களுக்கு முன்பே செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary :
TNSTC announces special bus services to Sabarimala from Tamil Nadu between Nov 16 and Jan 16 for Mandala and Makaravilakku season.









