“வேலை தாருங்கள்… இல்லை என்றால் சாக விடுங்கள்!” — மெரினாவில் கண்ணீருடன் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள்

0166.jpg

சென்னை:
“20 வருட உழைப்புக்குப் பிறகும் எங்களை ஏன் தெருவில் நிற்க வைத்து துன்புறுத்துகிறீர்கள்? எங்களுக்கு எங்கள் வேலையைத் தாருங்கள் — வாழ விடாமல் சாகடிக்கிறீர்களே!” என்று வலியுறுத்தி, தூய்மைப் பணியாளர்கள் இன்று (நவம்பர் 5) சென்னை மெரினா கடற்கரையில் கண்ணீருடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கடந்த 97 நாட்களாக தங்களின் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உரிமைக்காக போராடி வருகின்றனர்.

பின்னணி:

மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-இல் தூய்மைப் பணியை முன்பு ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டது. ஒப்பந்த காலம் முடிந்ததால், புதிய நிறுவனம் ஆகஸ்ட் 1 முதல் பணியில் ஈடுபட்டது. இதை எதிர்த்த தொழிலாளர்கள், புதிய நிறுவனத்தில் சேரும் பட்சத்தில் தங்களின் சம்பள, பணப் பலன்கள் மற்றும் நிரந்தர வேலையின் வாய்ப்பு கெட்டுவிடும் எனக் கவலை தெரிவித்தனர்.

மாநகராட்சி தரப்பில் மூன்று, நான்கு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் தீர்வு எட்டப்படவில்லை.

“16வது முறையாக கைது!”

போராட்டத்தின் 97-வது நாளான இன்று மெரினா கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கரைக்கு அழைத்தனர்.

ஒரு தொழிலாளர் கண்ணீருடன் கூறினார்:

“20 வருடமாக வேலை செய்கிறோம். 1328 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 15 முறை கைது செய்யப்பட்டோம்; இன்றோ 16-வது முறை. பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்ட முடியவில்லை, தீபாவளிக்கு டிரஸ் வாங்க முடியவில்லை. எங்களை வாழவும் விடாமல், சாகவும் விடாமல் செய்கிறார்கள்.”

அதிகாரிகள் வராதது குற்றச்சாட்டு

போராட்டம் தொடர்ந்தும் நடைபெறுகின்ற நிலையில், மாநகராட்சி தரப்பிலிருந்து எந்த அதிகாரியும் நேரடியாக பேச்சுவார்த்தைக்கு வராதது தூய்மைப் பணியாளர்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Summary :
Sanitation workers in Chennai’s Marina Beach held a tearful protest demanding permanent jobs after 20 years of service; police detained several.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *