ஜி-பே பரிவர்த்தனை ரூ.94,000: சவுக்கு சங்கரைச் சிக்க வைத்த புதிய வழக்கு

406.jpg

ஆயிஷா சாதிக் தயாரித்து இயக்கிய ‘ரெட் அண்ட் பாலோ’ (Red and Follow) திரைப்படம் விரைவில் வெளியாகத் தயாராக இருந்த நிலையில், அந்தப் படத்தைப் பற்றி சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று அதிகாலை சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திரைப்பட பாணியில் நடந்த இந்த கைது நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி: சிக்க வைத்த சினிமா சர்ச்சை

இந்தக் கைதுக்குப் பின்னணியாக, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆயிஷா சாதிக் அளித்த புகார் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அவர் தயாரித்து இயக்கிய ‘ரெட் அண்ட் பாலோ’ திரைப்படம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையால் ஈட்டப்பட்ட பணத்தில் தயாரிக்கப்பட்டதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட அஜய் வாண்டையார் என்பவர் அந்தப் படத்தில் நடித்துள்ளதாகக் குறிப்பிட்டு அவர் வீடியோ வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, தன்னை அவதூறாகப் பேசியதாகவும், அந்த வீடியோவை நீக்கக் கோரியபோது ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் ஆயிஷா சாதிக் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆதம்பாக்கம் போலீசார் சவுக்கு சங்கருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

திரைப்பட பாணியில் கைது

இந்த நிலையில், பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 12-வது மாடியில் சவுக்கு சங்கர் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் கதவைத் திறக்குமாறு கேட்டனர். ஆனால், அவர் உள்ளிருந்து கதவை பூட்டிக் கொண்டு, “என்னை அநியாயமாக கைது செய்ய முயல்கிறார்கள்” என சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார்.

நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகும் அவர் கதவைத் திறக்காததால், போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று சவுக்கு சங்கரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஜி-பே மூலம் ரூ.94,000 பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அது விசாரணையில் முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் மோதல்: அதிமுக – திமுக வார்த்தைப் போர்

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்வினைகள் எழுந்தன.

அதிமுக கண்டனம்:
“விமர்சகர்களை ஒடுக்கும் கொடுங்கோல் ஆட்சியை இந்த அரசு நடத்துகிறது. மழை வெள்ளம், பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளை புறக்கணித்து, ஒரு சினிமா விமர்சனத்திற்காக கதவை உடைத்து கைது செய்திருப்பது அதிகார போதையின் உச்சம்” என அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் குற்றம் சாட்டினார்.

திமுக விளக்கம்:
இதற்கு பதிலளித்த திமுகவின் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “சட்டம் தன் கடமையைச் செய்கிறது. ஒரு பெண்ணை மிரட்டி பணம் பறித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுப்படியே காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. போலீசார் நாகரீகமாகவே நடந்துகொண்டனர். ஆனால், சவுக்கு சங்கர் ஒத்துழைக்க மறுத்ததால் இந்த நிலை ஏற்பட்டது” என விளக்கமளித்தார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary :
Controversial YouTuber Sawukku Shankar was arrested in Chennai following extortion allegations, GPay money transfer evidence and a film-related complaint.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *