சென்னை:
பீகார் தேர்தல் பிரசாரத்தின் போது, “தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்” என்று பிரதமர் மோடி பேசியதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“தமிழ்நாட்டில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்று கூறுவது முழுக்க முழுக்க பொய்யானது. இதை பிரதமர் மோடி தேர்தல் லாபத்திற்காக கூறுவது, தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் பாகுபாட்டின் வெளிப்பாடாகும்.
முன்னதாக ஒடிசா தேர்தலில் தமிழர்களை ‘திருடர்கள்’ என கூறிய மோடி, இப்போது ‘வன்முறையாளர்கள்’ என அவதூறு செய்கிறார். இது தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் முயற்சியாகும்.
பீகாரில் வெளியான போலிக் காணொளிகள் குறித்து அங்குள்ள அரசு ஏற்கனவே ‘இவை அனைத்தும் பொய்யானவை’ என்று உறுதி செய்துள்ளது. அதை அறிந்தும், மோடி இதே குற்றச்சாட்டை மீண்டும் கூறுவது தமிழ் விரோத மனநிலையாகும்,” என்றார் சீமான்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களைத் தாக்கிய பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அவை குறித்து பிரதமர் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் தமிழர்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவது மிகப்பெரும் அநியாயம்.
மோடி உண்மையிலேயே பிரதமராக இருந்தால், தமிழர்களைத் திருடர்களாகவும் வன்முறையாளர்களாகவும் சித்தரிக்கும் இந்த பொய்யுரைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில், 2026-ல் தமிழர்கள் தங்களது வாக்கால் பாஜகவுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள்,” என சீமான் எச்சரித்துள்ளார்.









