“எங்க நிக்கிறேன்னு பார்க்காதீங்க… என்ன பேசினேன்னு பாருங்க” ஆர்.எஸ்.எஸ். சர்ச்சைக்கு சீமான் ஆவேச பதில்

405.jpg

சென்னை: ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய அமைப்பின் மேடையில் சீமான் உரையாற்றியதைச் சுற்றி எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் கடும் பதிலளித்துள்ளார்.

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், ஆர்எஸ்எஸ்-ன் பொது விவாத அமைப்பான ‘விஜில்’ சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதியார் பிறந்த தினம் மற்றும் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில், “பாரதி கண்ட பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம்: தமிழ் இளைஞர்களின் பார்வைக்கு” என்ற தலைப்பில் சீமான் உரையாற்றினார்.

ஆர்எஸ்எஸ் போன்ற சித்தாந்த ரீதியாக எதிராக பார்க்கப்படும் அமைப்பின் மேடையில் சீமான் பேசியது, திராவிட இயக்க ஆதரவாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சீமான் ஆவேசமாக பதிலளித்தார்.
“விமர்சனங்கள் எழவில்லை என்றால், நான் ஏன் அந்த நிகழ்ச்சியில் பேச வேண்டும்? அது அரசியல் இயக்கம் அல்ல; பாரதி பற்றி பேச அழைத்த ஒரு இலக்கிய மேடை. பாரதி இருக்கும் இடத்தில் தமிழ் இருக்கும். தமிழ் இருக்கும் இடத்தில் என் தாய் இருப்பாள். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பேன்,” என்று கூறினார்.

மேலும், “நாளை திமுக பாரதி குறித்து கூட்டம் நடத்தினால், அங்கேயும் போய் பேசுவேன். 12 ஆண்டுகள் திராவிடக் கழக மேடைகளில் நான் பேசியபோது இனித்தது. இப்போது கசக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “பாஜகவுக்கு இந்தியாவில் காலூன்ற உதவியதே கருணாநிதி என ராஜ்நாத் சிங் பேசிய வீடியோக்கள் என்னிடம் இருக்கின்றன. இன்றுகூட வேல்ஸ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் பங்கேற்றபோது, திமுக அமைச்சர்களும், எம்பி கமலும் அவர்களுடன் அமர்ந்திருக்கிறார்களே… அதற்கு என்ன பதில்?” என்றும் சீமான் கேள்வியெழுப்பினார்.

“நான் எந்த மேடையில், யாருடன் நிற்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டாம். அந்த மேடையில் நின்று நான் என்ன பேசினேன் என்பதை மட்டும் பாருங்கள்” என்று கூறி, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Summary :

Seeman hit back at critics for questioning his speech at an RSS-linked forum, saying the focus should be on what he spoke, not where he spoke.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *