சிவகங்கை விபத்தில் மூவர் பலி – முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு

217.jpg

சிவகங்கை: திருப்புவனம் அருகே நடந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் சிட்டம்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (20), மற்றும் 3 வயது மகன் அஸ்வந்த் ஆகியோர், நேற்று (11.11.2025) இரவு மதுரை நோக்கி பைக்கில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டது.

தகவலின்படி, பிரசாத் தனது மனைவி, மகன் மற்றும் உறவினர் சோனேஸ்வரியுடன் சிவகங்கை மாவட்டம் அனஞ்சையூர் கிராமத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பூவந்தி – சக்குடி பகுதியில் மதுரையிலிருந்து வந்ததாக கூறப்படும் காவல்துறை வாகனம் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்துடன் மோதியது.

மோதல் அதீதமாக இருந்ததால் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரது மனைவி சத்யா மற்றும் மகன் அஸ்வந்த் ஆகியோர் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் பயணித்த சோனேஸ்வரி கடுமையாக காயமடைந்து, தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த துயரச் செய்தியை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளார். காயமடைந்த சோனேஸ்வரிக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத்தையும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு, “போலீஸ் வாகன ஓட்டுனரின் அலட்சியமே விபத்துக்குக் காரணம்” என குற்றம் சாட்டி, பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary :
A tragic road accident in Sivagangai killed three family members after a police vehicle collision. CM Stalin announced ₹3L relief per victim.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *