சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் வாகனம் மோதி மூவர் பலி — கிராம மக்கள் சாலை மறியல் பரபரப்பு

216.jpg

சிவகங்கை: திருப்புவனம் அருகே சக்குடி பகுதியில் நடந்த சோகமான விபத்தில், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிட்டப்பட்டியைச் சேர்ந்த பிரசாத் (25), மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2) ஆகியோர் இன்று அனஞ்சியூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர். இரவு நேரத்தில் ஊருக்குத் திரும்பும் வழியில் சோனை ஈஸ்வரி (25) என்ற பெண்ணையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திரும்பி வந்தனர்.

அப்போது, திருப்புவனம் அருகே சக்குடி பகுதியில், எதிரே வந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனம் அதிவேகமாக மோதியது. அதில், பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடுமையாகக் காயமடைந்த சத்யா மற்றும் மகன் அஷ்வின் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். சோனை ஈஸ்வரி தீவிர காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம் கிராம மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. “போலீஸ் வாகன ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என்று கோரிய மக்கள், திருப்புவனம்–சக்குடி சாலையில் உடலை எடுத்துச் செல்ல மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து முடங்கியும் பரபரப்பும் நிலவியது.

தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சமாளித்தார். சம்பவம் தொடர்பாக பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary :
A police van rammed a bike in Sivagangai, killing three family members. Villagers protested demanding action against the police driver.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *