கொழும்பு:
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், “கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது, அதை மீட்டுக் கொள்வதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதுரையில் நடந்த கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டில் வலியுறுத்தியிருந்தார்.

இந்தக் கருத்து இலங்கை அரசியல் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், “தென்னிந்தியாவில் தேர்தல் காலம் என்பதால் இப்படி கருத்துகள் வெளிப்படுகின்றன. இதை இலங்கை அரசு பொருட்படுத்தத் தேவையில்லை. கச்சத்தீவு எங்களுடையது — அதை ஒருபோதும் இந்தியாவுக்கு ஒப்படைக்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.
இதற்குப் பின்னர், இலங்கை தொழிலாளர் சமூக கூட்டமைப்பு தலைவர் என்.வி. சுப்பிரமணியம் கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“வரலாறு தெரியாத ஓர் நடிகருக்கு, ‘கச்சத்தீவு எங்களுடையது’ என்று சொல்லி விளக்க தேவையில்லை. ஆனால் மோடி அரசும், விஜய்யின் கட்சியும் சீனாவிடம் பறிபோகும் நிலங்கள் குறித்து கேட்கத் துணியவில்லை. சீனாவிடம் கேட்க துப்பில்லாதவர்கள், இலங்கையிடம் கச்சத்தீவு கேட்கும் தைரியம் காட்டுவது நகைப்புக்குரியது.”
மேலும் அவர் கூறியதாவது:
“விஜய் ஒரு புதிய அரசியல்வாதி; வாக்கு வங்கிக்காக மீனவர் பிரச்சினையை அரசியல் ஆயுதமாக்குகிறார். இந்தியா–இலங்கை இடையேயான ஒப்பந்தங்கள் பற்றித் தெரியாமலே பேசுகிறார். பழைய அரசியல் தலைவர்களுக்குக் கூட தெரியும் — கச்சத்தீவை மீட்க இயலாது என்று.”
சுப்பிரமணியம் மேலும் விமர்சித்தார்:
“ஒருபுறம் சீனா இந்தியாவின் எல்லையை மீறி நிலம் கைப்பற்றிக்கொண்டு இருக்கிறது. அதை திரும்பப் பெற மத்திய அரசுக்கு தைரியம் இல்லை. அப்படியிருக்க, கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்போம் என்று கூறுவது அர்த்தமில்லாத பேச்சு. விஜய் வரலாறு படிக்கட்டும். ராமேஸ்வரம்–கச்சத்தீவு இடைவெளி 30 மைல்; தனுஷ்கோடி இலங்கையின் தலைமன்னாரிலிருந்து வெறும் 18 மைல் தொலைவில் தான் இருக்கிறது. அப்படியிருக்க, அதை ஏன் இந்தியா கேட்கவில்லை?”
மீனவர் பிரச்சினையையும் அவர் சுட்டிக்காட்டி,
“இந்தியா–இலங்கை மீனவர் மோதல் சட்டவிரோத இழுவைமடி (Bottom Trawling) தொழிலால் தான் தொடர்கிறது. அதனை நிறுத்தினால் தான் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். விஜய்க்கு உண்மையான அக்கறை இருந்தால், அதற்காக மத்திய அரசுடன் பேசட்டும். ஆனால் கச்சத்தீவை அரசியல் கருவியாக்குவது தவறு,” என்று அவர் கடுமையாக கூறியுள்ளார்.
Summary:
Sri Lankan politician NV Subramaniyam has lashed out at Tamil actor Vijay for demanding India reclaim Katchatheevu from Sri Lanka. He mocked the Modi government and Vijay’s party for daring to question Sri Lanka but staying silent on China’s border aggression.








