சென்னை:
மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நூலகங்கள் அமைக்கும் பணியை தொடர்ந்து, மேலும் மூன்று மாவட்டங்களில் பிரம்மாண்ட நூலகங்களை கட்டும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, சேலம், நெல்லை மற்றும் கடலூர் மாவட்டங்களில் புதிய நூலகங்களை அமைக்க டெண்டர் கோரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில், இம்மூன்று மாவட்டங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நூலகம் கட்டப்பட்டுள்ளன. மதுரை நூலகம் மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் போட்டித் தேர்வாளர்களுக்கு முக்கிய அறிவுக் களஞ்சியமாக திகழ்கிறது.
அதேபோல், கோவை மாவட்டத்தில் கட்டுமான பணிகள் 75% முடிவடைந்த நிலையில், திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படுகிறது. இவை அந்தந்த மாவட்டங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தற்போது, அடுத்த கட்டமாக சேலம், நெல்லை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன:
-
சேலம்: பாரதிதாசன் பெயரில், 75,000 சதுர அடி பரப்பளவில், ரூ.74 கோடி செலவில் நூலகம்.
-
நெல்லை: காயிதே மில்லத் பெயரில், 70,000 சதுர அடி பரப்பளவில், 5 தளங்களுடன், ரூ.69 கோடி மதிப்பில் நூலகம்.
-
கடலூர்: அஞ்சலை அம்மாள் பெயரில், ரூ.80 கோடி மதிப்பில் நூலகம்.
டெண்டர் செயல்முறைகள் விரைவில் நிறைவு பெறும் எனவும், பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கோவை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் நூலக கட்டுமானப் பணிகளும் விரைவில் முடிந்து, தற்போதைய ஆட்சிக்காலத்திலேயே திறந்து வைக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Summary :
Tamil Nadu government invites tenders for new mega libraries in Salem, Nellai, and Cuddalore, expanding its state-wide knowledge hubs.









