இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அங்குள்ள சுங்கச்சாவடிகள் வாகன உரிமையாளர்களுக்கும் பயணிகளுக்கும் பெரும் தொல்லையாக உள்ளன. நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் மட்டும் 5,400 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையில் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் ₹100 கோடி வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிப்பதால், சுங்கச்சாவடிகள் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.
சமீபத்தில், தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. வானகரம், செங்கல்பட்டு, பரனூர், திண்டிவனம் உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் ₹30 முதல் ₹150 வரை கட்டணம் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கூடுதல் செலவை சந்திக்க வேண்டியுள்ளது.
ஒருபுறம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், சுங்கச்சாவடி நிர்வாகங்கள் வாகனங்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.
தன்னார்வ அமைப்புகளின் ஆய்வில், 70% சுங்கச்சாவடிகளில் போதுமான வசதிகள் இல்லை என்றும், பல விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், தனி கழிப்பறைகள், முதலுதவி பெட்டிகள், ஆம்புலன்ஸ் வசதி, பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான தனிப்பாதை போன்ற அடிப்படை வசதிகள் கூட பல இடங்களில் இல்லை.
சுங்கக்கட்டண விவரங்கள் மற்றும் அடுத்த சுங்கச்சாவடி குறித்த அறிவிப்பு பலகைகள் முறையாக வைக்கப்படுவதில்லை. வாகன ஓட்டிகள் ஓய்வெடுப்பதற்கான அறைகள் கூட பல சுங்கச்சாவடிகளில் இல்லை. குறிப்பாக, சேலம்-உளுந்தூர்பேட்டை வழித்தடத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கழிப்பறை வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், சில இடங்களில் நான்கு வழிச்சாலை திடீரென இரு வழிச்சாலையாக மாறுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
ஒன்றிய அரசின் விதிப்படி, 15 ஆண்டுகளை கடந்த சுங்கச்சாவடிகளை மூட வேண்டும். தமிழகத்தில் அப்படி 32 சுங்கச்சாவடிகள் இருந்தும் அவை மூடப்படவில்லை. மாறாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 12 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு சுங்கச்சாவடிக்கும் மற்றொரு சுங்கச்சாவடிக்கும் இடையே 60 கி.மீ. இடைவெளி இருக்க வேண்டும், நகராட்சி எல்லைக்கு 10 கி.மீ. தூரத்தில் இருக்க வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணம் மற்றும் சாலைகளின் மதிப்பீடு குறித்து தெளிவான வரையறைகளை அரசு வகுக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சுங்கக்கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சேலத்தில் இருந்து டெல்லி செல்லும் ஒரு லாரிக்கு ₹800 முதல் ₹1000 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது.
ஒவ்வொரு கட்டண உயர்வின்போதும் அதனை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சுங்கச்சாவடிகளின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.
Summary : Toll booths in Tamil Nadu, already numbering 78 and collecting over ₹100 crore daily, have increased fees at 40 locations, further burdening commuters and the transport industry. Despite the rising costs, most toll plazas lack basic amenities like clean water, restrooms, and first aid, violating established regulations. Concerns are also raised about expired toll booths continuing to operate and new ones being established without proper adherence to distance and road quality norms. Truck owners are protesting the repeated fee hikes, which significantly increase their operational costs.