மதுரை: தமிழகத்தில் நாய், பூனை வளர்த்தால்கூட வரி விதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் மக்களை வரிகளால் நெருக்கடி கொடுத்து வருகின்றனர் என்றும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வைத்து மக்களின் ஆசையை தூண்டி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்வில் பேச்சு
மதுரை மாகப்பூபாளையத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார்.
கல்வியில் அதிமுக ஆட்சியில் வளர்ச்சி – இஸ்ரோவிலும் தமிழர்கள் சாதனை!
“அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பல உயர்கல்வி நிலையங்கள் உருவானதால் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் உலகளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். இஸ்ரோவிலும் கூட தமிழர்கள் உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி கல்வியில் முன்னேற்றம் செய்ய வழி ஏற்படுத்தியது ஜெயலலிதா. அன்னையா தெரசா கூட பெண் சிசு பாதுகாப்பு திட்டத்துக்கு பாராட்டு தெரிவித்தார்,” என்று அவர் தெரிவித்தார்.
திமுகவின் ‘சதுரங்க வேட்டை’ – மக்களை ஏமாற்றிய வாக்குறுதிகள்!
“திமுகவினர் தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை 4 வருடங்களாக நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைப்பதாக கூறி மக்களின் ஆசையை தூண்டி, இப்போது அதனை மறந்து மக்களை வாட்டி வருகின்றனர். ஸ்டாலின், கருணாநிதியை மிஞ்சிவிட்டார். வெளிநாடுகளில் முதலீட்டை ஈர்க்க சென்றவர், சைக்கிள் ஓட்டியதோ தவிர எந்த முதலீட்டையும் கொண்டு வரவில்லை. மின்கட்டணம் மட்டும் 52% உயர்ந்துள்ளது,” என்று அவர் சாடினார்.
திமுக – பாஜக இரகசிய கூட்டணி?
“மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுகவும் பாஜகவும் கள்ள கூட்டணி வைத்திருக்கின்றனர். ஆனால் வெளியில் மலுப்ப உதயநிதி, அண்ணாமலை போன்றோர் சண்டையிட்டு கொள்வது போல் நாடகம் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற பிரச்சனைகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் பேசினார்.
நாய், பூனைக்கும் வரியா? மக்களுக்கு வரி மோசடி!
“திமுக அரசு, மக்களுக்கு வரிமேல் வரி விதித்து வாட்டி வதைக்கிறது. இப்போது வீட்டில் வளர்க்கும் நாய், பூனைக்கும் வரி விதிக்கின்றனர். நாளை சாலையில் நடந்தால்கூட வரி கட்ட சொல்லலாம். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக 3.5 லட்சம் கோடி கடன் பெற்றது, ஆனால் திமுக 5 ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. தொடர்ந்து மக்களை ஏமாற்றும் அரசாக திமுக மாறியுள்ளது,” என அவர் கூறினார்.
அதிமுக திரும்பி வரும்!
“மக்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டால், விரைவில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். மக்கள் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்,” என்று செல்லூர் ராஜூ வலியுறுத்தினார்.