சென்னை:
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் வேகமாக நடைபெறுவதை எதிர்த்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை தங்கச்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்,
“ஒரு வாரத்திலேயே தமிழ்நாட்டில் 25 சதவீதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எஸ்.ஐ.ஆர் எனப்படும் மறைமுக குடியுரிமை ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதி. தேர்தல் ஆணையத்தால் இத்தகைய செயல்முறை மேற்கொள்ளப்பட முடியாது. இது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இணைந்து முன்னெடுத்து வரும் ஆபத்தான திட்டம்,” என்று குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறியதாவது:
“குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோது நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பாஜக, இந்த சட்டத்தின் மூலம் சில சமூகங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட முயல்கிறது. தற்போது நடைபெறும் எஸ்.ஐ.ஆர் அதற்கான ஒரு முயற்சியாகவே தெரிகிறது. ஒரே நேரத்தில் பல நோக்கங்களுடன் RSS செயல்படுகிறது,” என்றார்.
திருமாவளவன் மேலும், “தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்முறையாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி வழிகாட்டியுள்ளார். மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நாங்கள் தொடர்ந்தும் இதற்கு எதிராக போராடுவோம்,” என்று உறுதியளித்தார்.
Summary :
Thirumavalavan alleges 25% voters deleted in Tamil Nadu under SIR process; blames BJP and EC, calling it a hidden citizenship review plan.








