ஜூலை 14-ம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) கேள்வி நேரத்தின்போது, திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் கோயிலின் குடமுழுக்கு விழா நீண்ட நாட்களாக நடத்தப்படாமல் இருந்தது. டிஜிட்டல் சர்வே, ட்ரோன் சர்வே, ஜிஓ சர்வே என மூன்று விதமான ஆய்வுகளும் முடிவடைந்த நிலையில், ஜூலை 14ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறும்.
மேலும், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த ரூ.32 கோடி செலவாகும் என்று திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, கூடுதல் நிதி ஒதுக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சிறப்பு நிதி ஒதுக்காத காரணத்தை வி.வி.ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அமைச்சர் சேகர்பாபு மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன், இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்குவதற்கு அவர் உறுதியளித்துள்ளார். நிச்சயமாக இந்த ஆண்டு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படும்.
அதேபோல், கும்பாபிஷேகத்தைப் பொருத்தவரை, கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு, தற்போது இரண்டு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் 16 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
14.07.2025 அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தில் நானும் அமைச்சர் மூர்த்தியும் கலந்துகொள்ள இருக்கிறோம். சட்டப்பேரவை உறுப்பினர்களும் வருகை தந்து கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி முடிப்போம்” என்று அமைச்சர் பதிலளித்தார்.









