திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்து அமைப்புகள்

408.jpg

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் தற்போது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு, இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் முருகப்பெருமான் கோவில் வரலாறு மிகப் பழமையானது என்றும், திருமுருகாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு, மதுரைக்காஞ்சி, கலித்தொகை, தேவாரம் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் மலையுச்சியில் உள்ள தீபத்தூணில், 1926-ம் ஆண்டு சிவில் பிரச்சினை எழும் வரை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பழமைவாய்ந்த நடைமுறையைப் பின்பற்றி, இந்த ஆண்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்த போதும், அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரியபோது, போலீசார் அதை மறுத்ததாகவும், இது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே, திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வேலவதாஸ் மற்றும் கார்த்திகேய வெங்கடாஜலபதி, போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்து போலீசார் அனுமதி மறுப்பது சட்டவிரோதம் என வாதிட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபுல்கலாம் ஆசாத், திருப்பரங்குன்றம் மலை பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என்பதால் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ஆதரவு அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், திருப்பரங்குன்றத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வழங்கலாம் எனக் கூறினார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரர் கோரிய இடத்திலேயே 50 பேர் மட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கலாம் என்றும், தனிநபர்களையோ அரசியல் கட்சிகளையோ தாக்கும் வகையில் பேசக் கூடாது, கட்சி கொடிகளை பயன்படுத்தக் கூடாது, ஒரே ஒரு மைக் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் போராட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.

இதனையடுத்து, நீதிமன்ற நிபந்தனைகளின் பேரில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தற்போது உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Summary :

Hindu groups launch a hunger strike demanding permission to light Karthigai Deepam at Thirupparankundram hill, following Madurai HC’s conditional approval.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *