தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நாளில் பெயர் சேர்ப்பு/நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களைச் செய்யும் வகையில், வரும் டிசம்பர் 13, 2025 சனிக்கிழமை, மாநிலம் முழுவதும் சிறப்பு ரேஷன் அட்டை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டை பயன்படுகிறது. நியாயவிலைக் கடைகள் வழியாக இலவசமாக அரிசி, பச்சரிசி வழங்கப்படுவதோடு, சர்க்கரை, பாமாயில், கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. பொங்கல் தொகுப்பு, மழை-வெள்ள நிவாரணம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களுக்கும் ரேஷன் அட்டை அடையாள ஆவணமாக செயல்படுகிறது.
தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 36,000 நியாயவிலைக் கடைகளும், 2 கோடியே 27 லட்சம் ரேஷன் அட்டைகளும் பயன்பாட்டில் உள்ளன. 1,07,910 புதிய ரேஷன் அட்டை விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், இதில் தகுதியுடைய 55,000 நபர்களுக்கு விரைவில் அட்டைகள் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலகங்களுக்கு பலமுறை சென்று திருத்தங்களைச் செய்ய வேண்டிய சிரமத்தை குறைக்க, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த ஒருநாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் தேதி & நேரம்
-
தேதி: 13.12.2025 (சனிக்கிழமை)
-
நேரம்: காலை 10.00 மணி – பிற்பகல் 1.00 மணி
சென்னையில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் முகாம் நடைபெறும். மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதாந்திர மக்கள்குறைதீர் முகாம்களை அரசு தொடர்ந்து நடத்தவுள்ளது.
முகாமில் வழங்கப்படும் சேவைகள்
-
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் / நீக்குதல்
-
முகவரி மாற்றம்
-
கைபேசி எண் பதிவு / மாற்றம்
மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் நியாயவிலைக் கடைகளுக்கு வர முடியாத சூழலில், அவர்களுக்கு விசேஷ அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் தொடர்பான புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்கள், சேவைகளில் குறைபாடுகள் இருந்தால், அவைகளையும் இந்த முகாமில் பதிவு செய்து தீர்வு பெறலாம்.
இந்த சிறப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்கள் ரேஷன் அட்டைகளில் உள்ள அனைத்து திருத்தங்களையும் ஒரே நாளில் எளிதில் செய்து கொள்ள முடியும்.
Summary :
Tamil Nadu to conduct a special one-day ration card correction camp on Dec 13, allowing name, address changes and complaint submissions statewide.








