திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் ஊடகங்களிடம் பேசிய பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அரசியலில் தாம் செய்த தவறுகளில் ஒன்றாக அன்புமணியை மத்திய சுகாதார அமைச்சராக நியமித்தது என்றும், கட்சித் தலைவராக பதவி அளித்ததும் மற்றொரு தவறாகும் என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
“46 ஆண்டுகளாக பா.ம.க-வை ஒற்றுமையுடன் நடத்தி வந்தேன். ஆனால் இப்போது அன்புமணியும் அவரது மனைவியும் தலைமையிலான கும்பல் கட்சியில் பிளவை ஏற்படுத்தி வருகின்றனர். நான் வளர்த்த பிள்ளைகளே இன்று எனக்கு எதிராகப் பேசுகிறார்கள். இது மிகுந்த வருத்தம் தருகிறது.”
“அன்புமணியை மத்திய சுகாதார அமைச்சராக ஆக்கியது என் அரசியல் வாழ்க்கையில் செய்த தவறு. அடுத்து அவருக்கு தலைவராக பொறுப்பு கொடுத்ததும் இன்னொரு தவறு. அவரின் பேச்சும் செயலும் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு அவமானமாகிவிட்டது.”
“பா.ம.க பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 30-ம் தேதி தலைவாசலில் நடைபெறும். அப்போது கூட்டணி மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து தீர்மானம் எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார். சேலம் பா.ம.க எம்.எல்.ஏ அருள் தாக்கப்பட்ட விவகாரத்தில், “போலீசார் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர்,” என்றும் ராமதாஸ் கூறினார்.
Summary :
PMK founder Dr. Ramadoss said appointing Anbumani as Union Minister and party leader was a political mistake; major party meet on Dec 30.








