You are currently viewing பல்கலைக்கழக விவகாரம்: ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் – முதல்வர் கண்டனம்!

பல்கலைக்கழக விவகாரம்: ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் – முதல்வர் கண்டனம்!

0
0

பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் முடிவு மாநில உரிமைகளுக்கு எதிரானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல் அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிகள் குறித்து கண்டனம் தெரிவித்தார். குறிப்பாக, கல்வித்துறையுடன் தொடர்பில்லாதவர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்க அனுமதிக்கும் விதி, கூட்டாட்சித் தத்துவத்துக்கும், மாநில சுயாட்சிக்குமான உரிமைகளுக்கும் எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.

 

மத்திய பாரதிய ஜனதா அரசு இந்த விதிகளின் மூலம் மத்தியில் அதிகாரங்களை குவித்து, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைத்து எடுப்பதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். கல்வி அமைச்சகத்தை மாநில அரசின் பொறுப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆளுநர்களுக்கு அதிகாரம் வழங்குவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தரவரிசையில் முன்னணியில் உள்ள தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி உரிமையை இழக்கக் கூடாது என்று கூறிய முதலமைச்சர், கல்வி பொதுப்பட்டியலுக்குச் சேர்ந்தது என்பதால், மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது என்று தெரிவித்துள்ளார்.

“பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிகளை தமிழக அரசு சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கும்” என முதலமைச்சர் உறுதியுடன் அறிவித்துள்ளார்.

Leave a Reply